Kerala accident: விடுதியில் தகராறு.. போலீஸ்க்கு பயந்து அதிவேகத்தில் போனதால் விபத்தா? கேரள சம்பவத்தில் வெளியான பகீர்

  • திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் விபத்தில் சிக்கி பலியான தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 8 பேரும் விபத்து நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் விடுதி ஒன்றில் சண்டையிட்டதாகவும், அப்போது போலீசுக்கு பயந்து காரை வேகமாக இயக்கியதால் விபத்து நேரிட்டு இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர், வீட்டிற்கு தெரியாமல் கேரளாவுக்கு காரில் சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கினர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலம் பகுதியில் சாலையின் வலது பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்பக்கத்தில் மாணவர்கள் சென்ற கியா கார், மின்னல் வேகத்தில் சென்று மோதியது.

    Advertisement

    போலீஸ்க்கு பயந்து

    இந்த பயங்கர விபத்தில் கார் அடையாளமே தெரியாத அளவுக்கு உருக்குலைந்தது. காரில் பயணம் செய்த 8 பேரும் பலியாகினர். இந்த விபத்தில் மதுரையை சேர்ந்த சந்தோஷ் (வயது 20), பிரசன்னா, முரளி கிருஷ்ணன், ஜோஷ்வா, சேலத்தை சேர்ந்த விஷ்வா, திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா, ஜீவா, யுவசஞ்சித் ஆகிய 8 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    கார் விபத்தில் சிக்கியதற்கு சாலையில் சட்டவிரோதமாக லாரியை நிறுத்தியது ஒரு காரணமாக சொல்லப்பட்டது. அதேநேரத்தில் விபத்தில் பலியான மாணவர்கள் மது அருந்தியதற்கான தடயங்கள் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது. இதற்கிடையே, பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறையடுத்து போலீஸ்க்கு பயந்து மாணவர்கள் காரில் அதிவேகமாக சென்ற போதுதான் விபத்து ஏற்பட்டதாக மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    விடுதியில் ஏற்பட்ட தகராறு

    விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் சிக்கி பலியான 8 மாணவர்களும் விபத்து நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் விடுதி ஒன்றில் சண்டையிட்ட தகவல் வெளியாகியுள்ளது. குருவாயூரில் உள்ள கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு கொடுங்காலூர் நோக்கி மாணவர்கள் புறப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சில மாணவர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    திருச்சூர் தளிக்குளம் 10-ஆம் கல் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இரவில் தங்க திட்டமிட்டுள்ளனர். விடுதி முன்பு காரை நிறுத்திய போது அங்கு இருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினர் இடையே கை கலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பயந்து போன மாணவர்கள் உடனடியாக காரை எடுத்துக்கொண்டு கொடுங்கால்லூர் நோக்கி சென்றுள்ளனர்.

    Advertisement

    போலீசார் தங்களை பிடித்துவிடக்கூடாது என நினைத்துக்கொண்டு அதிவேகமாக காரை மாணவர்கள் இயக்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த கோர விபத்துக்குக் சாலையோரம் எந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இன்றி லாரி நிறுத்தப்பட்டதுதான் முதன்மையான காரணம் எனவும், விடுதியில் ஏற்பட்ட தகராறையடுத்து போலீஸ்க்கு பயந்து பதற்றத்துடன் காரை அதிவேகத்தில் இயக்கியதும் இன்னொரு காரணமாக அமைந்து இருக்கலாம் என்று கூறும் கேரள போலீசார், மாணவர்களை காரில் விரட்டியதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

    முன்னதாக விபத்து ஏற்பட முக்கிய காரணமாக இருந்த லாரியை மகாராஷ்டிராவை சேர்ந்த டிரைவர் துக்காராம் காம்ப்ளே, விபத்து நடைபெற்றவுடன் தலைமறைவாகியிருந்தார். அவரை அடுத்த நாளே போலீசார் கைது செய்தனர்.

    English Summary

    Kerala accident: Reports indicate that the eight college students from Tamil Nadu, who died in an accident in Thrissur, Kerala, had been involved in an altercation at a hostel shortly before the crash; the accident may have occurred because they drove the car at high speed out of fear of the police.