திருவனந்தபுரம்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி கேரள சட்டசபையில் இன்று திங்கள்கிழமை வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் வி.டி. சதீசன் முன்மொழிந்த இந்த தீர்மானத்திற்கு ஆளும் காங்கிரஸ் முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான இடதுசாரிகள் கூட்டணி என இரண்டுமே ஆதரவு அளித்துள்ளது. பாஜகவை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் மட்டுமே தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடு முழுக்க தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் அவர் தன்னிச்சையாக முடிவெடுத்தாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும் கரப்பான் பூச்சி கட்சி போன்ற அமைப்புகளும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி கேரளா முதலமைச்சர் வி.டி. சதீசன் தீர்மானத்தை முன்மொழிந்தார். கேரள சட்டசபையில் இன்று இந்த முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளும் காங்கிரஸ் முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான இடதுசாரிகள் கூட்டணி என இரண்டுமே ஆதரவு அளித்துள்ளது. அதேநேரம் பாஜகவை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் மட்டுமே தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து கவலைகளையும் இந்த தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. எஸ்ஐஆர் நடைமுறையில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாதது, தொழில்நுட்ப முறைகேடுகள் காரணமாக சிறுபான்மையினர், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் உள்ளிட்டோர் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் எச்சரித்தனர். வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டதாகவும் 1960ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளுக்கு முரணாக படிவம் 6 திருத்தப்பட்டதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் வி.டி. சதீசன், "கேரளம் வரலாறு படைக்கிறது" என்று குறிப்பிட்டதுடன், "தேர்தல் நடைமுறையின் நேர்மை என்பது சமரசம் செய்துகொள்ள முடியாதது" என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைமுறைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க மூன்று முக்கிய கோரிக்கைகளை கேரள சட்டசபை முன்வைத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளைச் சரிசெய்வது, தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியில் இருந்து நீக்குவது, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறையை சீரமைப்பது ஆகியவை அவற்றில் அடங்கும். குறிப்பாக தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இப்போது பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கேபினட் அமைச்சர் ஒருவர் இருக்கிறார்கள். அதை மாற்றி பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெறும் வகையில் குழுவை மறுசீரமைக்க வேண்டும் எனத் தீர்மானம் வலியுறுத்துகிறது. சதீசன் இந்த தீர்மானம் தொடர்பாக மேலும், "வாக்களிக்கும் உரிமையே நமது ஜனநாயகத்தின் அடித்தளம். நமது குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை எந்தவொரு அமைப்பும் பலவீனப்படுத்த அனுமதிக்க முடியாது. வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு நிலைநாட்டப்பட வேண்டும். ஜனநாயகம் வெல்ல வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேநேரம் இந்த தீர்மானத்தை எதிர்த்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வி. முரளீதரன், தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தை பாதுகாக்கும் வகையில் திருத்தங்களை முன்மொழிந்தார். இருப்பினும், அவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.தீர்மானம்
கேரள முதல்வர்
3 முக்கிய கோரிக்கைகள்
சதீசன்