ஞானேஷ் குமாரை உடனே நீக்குங்கள்.. கேரள சட்டசபையில் நாளை அதிரடி.. ஆதரவு அளிக்கும் இடதுசாரிகள்!

  • திருவனந்தபுரம்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க கோரி, கேரள சட்டசபையில் நாளை தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. முதலமைச்சர் வி.டி. சதீசன் இந்தத் தீர்மானத்தை முன்மொழிய உள்ளார். இந்த தீர்மானத்துக்கு இடதுசாரி ஜனநாயக முன்னணியும் ஆதரவு அளிக்க உள்ளது. இதனால் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் நிறைவேறும்.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே சமீபத்தில் எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களிலும் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டதாக பிற தேர்தல் ஆணையர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

    Advertisement

    தேர்தல் ஆணையர் விவகாரம்

    இது தொடர்பாக அவர்கள் கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 முறை ஆட்சேபனை தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். மேலும், சில அறிவிப்புகள் தங்களுக்கு தெரியாமலேயே கூட வெளியிடப்பட்டதாகவும் கூறியிருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளானது. இதையடுத்து எஸ்ஐஆர் மற்றும் வாக்காளர் பெயர்கள் நீக்கப்படுவது உள்ளிட்ட விவகாரங்களில் முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன. இந்த வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் ஜனநாயகத்தையும் தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மையையும் பாதிப்பதாக எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன. எனவே, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

    Advertisement

    போராட்டங்கள்

    இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் அரசியல் கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்டவை தீவிர போராட்டங்களில் இறங்கியுள்ளனர். அதேபோல கரப்பான் பூச்சி கட்சியும் கூட மிக பெரிய போராட்டங்களை அறிவித்துள்ளன.

    டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டத்திலும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தின்போது பலர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் விமானத்தில் வைத்தே தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டனர். மேலும், டெல்லி முழுக்க போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    Advertisement

    கேரள சட்டசபை

    இந்த சூழலில், கேரள சட்டசபையில் நாளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க கோரி, தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. முதலமைச்சர் வி.டி. சதீசன் இந்தத் தீர்மானத்தை முன்மொழிய உள்ளார். வழக்கமாக எப்போதுமே ஆளும் தரப்பு கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கவே செய்யும். ரொம்பவே அரிதான விவகாரங்களில் மட்டுமே எதிர்க்கட்சிகள் ஆதரவாக நிற்கும். அதன்படி இந்த தீர்மானத்துக்கு அங்குள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

    உச்ச நீதிமன்றம்

    கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகளை பொறுத்தவரை அவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போராட்டம் இப்போது தான் தொடங்கியுள்ளது என கூறிய கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள், நாளை முதல் மீண்டும் போராட்டத்தில் இறங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் பதற்றமான ஒரு சூழலே தொடர்ந்து நிலவுகிறது.

    English Summary

    A resolution seeking the removal of Chief Election Commissioner Gyanesh Kumar is set to be introduced in the Kerala(கேரள சட்டசபை தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான தீர்மானம்): Kerala Assembly latest news in tamil.