நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு உக்ரைன் போன கேரள மாலுமி! ரஷ்ய தாக்குதலில் பலி! நெஞ்சை உருக்கும் சோகம்

  • சென்னை: உக்ரைனில் கினியா - பிசவ் நாட்டு கொடியுடன் நின்ற கப்பல் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் கப்பலில் மாலுமிகளாக வேலை பார்த்து வந்த 4 இந்தியர்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இதில் கேரளாவை சேர்ந்த அகில் என்பவரும் உயிரிழந்தார். அகிலுக்கு தற்போது தான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இரண்டு மாதத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் ரஷ்யா தாக்குதலில் உயிரிழந்தது குடும்பத்தினரை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    உக்ரைனுக்கும் - ரஷ்யாவுக்கும் 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கும் உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள ஒடெசோ துறைமுகத்தில் சோளம் ஏற்றிக்கொண்டு இருந்த வணிக கப்பல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

    Advertisement

    2 மாதத்தில் திருமணம்

    கினியா - பிசவ் நாட்டு கொடியுடன் நின்ற கப்பல் மீது ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்கியது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த 10 பேர் பலியாகினர். இதில் 4 பேர் இந்தியாவை சேர்ந்த மாலுமிகள் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷ்ய தாக்குதலில் பலியான மாலுமி அகில் ஜோயன் என்பவர் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

    கேரளாவை சேர்ந்த இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. 26 வயதே ஆன அகிலுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடக்க இருந்தது. திருமண தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், ஏவுகணை தாக்குதலில் அகில் பலியாகியுள்ளார்.

    Advertisement

    தாங்க முடியாத சோகம்

    அகில் கடந்த ஆறு வருடங்களாக கப்பலில் பணியாற்றி வந்துள்ளார். விரைவில் வேறு பணிக்கு மாறிவிட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த கொடூரம் நடைபெற்றுள்ளது. அகில் ஒரே மகனாம். கேரளாவின் காசர்கோடில் எலக்ட்ரிகல் ஷாப் வைத்து இருக்கும் கோயன், ஒரே மகனை பறிகொடுத்து இருப்பதால், தாங்க முடியாத சோகத்தில் மூழ்கி உள்ளனர். சாதாரண குடும்பத்தை சேர்ந்த அகில் பெற்றோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மகனின் வருவாயையே பெரிதும் நம்பியிருந்துள்ளனர்.

    சமீபத்தில் புது வீடு ஒன்றை கட்டி முடித்து இருந்த நிலையில், மகனுக்கு விரைவில் திருமணம் முடித்து வைக்க முடிவு செய்து பெண் பார்த்துள்ளனர். பெண்ணும் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த சோகம் அரங்கேறியுள்ளது. அகில் உயிரிழந்தது குறித்த தகவல் பெற்றோருக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில் வேலை பார்த்த கப்பல் நிறுவனம் தகவலை அனுப்பியுள்ளது.

    Advertisement

    அப்பாவி சிப்பந்திகள் பலி

    கப்பல் நிறுவனம் மற்றும் மத்திய அரசுடன் இணைந்து அகில் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளை உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர். அகில் உயிரிழந்தது குறித்து வேதனை தெரிவித்துள்ள கேரள முதல்வர் அலுவலகம், ரஷ்ய தாக்குதலில் கேரள இளைஞர் பலியான விவகாரம் தொடர்பாக கூடுதல் விவரங்களை சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாடு வாழ் கேரள மக்களுக்கான துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷ்ய தாக்குதலில் பலியான 4 இந்தியர்களில் ஏனைய மூன்று பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி சிப்பந்திகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதும் கடல்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்திற்கு இடையூறு செய்வது கண்டித்தக்கது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    English Summary

    Kerala sailor: Russia launched a missile attack on a ship flying the flag of Guinea-Bissau in Ukraine. Ten people, including four Indian sailors, lost their lives in the attack. Among the deceased was Akhil, a native of Kerala. Akhil had recently become engaged; his death in the Russian attack, occurring just two months before his scheduled wedding, has plunged his family into inconsolable grief.