திருவனந்தபுரம்: கேரளாவில் விசா மோசடி செய்த நபர் வீட்டை பூட்டி கொண்டு உள்ளே பதுங்கியுள்ளார். அப்போது பரண் மீதிருந்த அட்டை பெட்டிகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவில் இருந்து, குறிப்பாக கேரளாவில் இருந்து, வேலைக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களில் பெரும்பாலானோருக்கு எந்தவொரு சிக்கலும் ஏற்படுவதில்லை. இருப்பினும், சிலர் மோசடி பேர்வழிகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.
அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. வெளிநாட்டில் விசா மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.80,000 மோசடி செய்த வழக்கில், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த நபரை கேரள போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். போலீசார் சுற்றி வளைத்த போது அவர்களிடம் சிக்காமல் இருக்க, அவர் வீட்டின் பரண் மீது ஏறி, அட்டை பெட்டிகளுக்கு பின்னால் பதுங்கியுள்ளார். இருப்பினும், போலீசார் அவரை தட்டி தூக்கியுள்ளனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பளக்காடு பகுதியை சேர்ந்தவர் துளசீதரன். இவர் விசா மற்றும் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து ஒருவரிடம் இருந்து ரூ.80,000 பெற்றுள்ளார். இருப்பினும், சொன்னபடி விசா மற்றும் வேலை ஏற்பாடு செய்து தராமல் இழுத்தடித்துள்ளார். இது குறித்து கேட்டாலும் உரிய பதில் தராமல் இருந்துள்ளார், இதையடுத்து அவர் மீது பணமோசடி புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவர் விசாரணைக்காக ஆஜராகாமல் இருந்தார். தலைமறைவாக இருந்த அவர் தேடப்படும் நபராக இருந்தார். இந்தச் சூழலில் தான் துளசீதரன் மீனங்காடி பகுதியில் உள்ள அம்பலப்பாடியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக ஸ்ரீகண்டபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மீனங்காடி போலீசாரின் உதவியுடன் அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். வீட்டின் கதவு மூடப்பட்டு இருந்தது. இருப்பினும், அவர் உள்ளே இருக்கலாம் என சந்தேகித்த போலீசார், சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே சென்றனர். அப்போது துளசீதரன் வீட்டில் இல்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். மேலும், போலீசாரின் விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெண் போலீசார் மற்றும் அப்பகுதி அண்டை வீட்டாரின் உதவியுடன், வீட்டுக்குள் நுழைந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அறைக்குள் இருந்த பரண் பகுதியில் அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார், அந்த பெட்டிகளை அகற்றியுள்ளனர். அப்போதுதான் அவற்றுக்கு பின்னால் துளசீதரன் மறைந்திருந்தது தெரியவந்தது. மறைந்திருந்த இடத்திலிருந்து போலீசார் அவரை கீழே இறக்கியுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த துளசீதரன் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை கீழே இறக்கிய போலீசார், கைது செய்தனர். விசா மற்றும் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட துளசீதரனை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறினர்.மோசமான சம்பவம்
கேரளா விசா மோசடி
ரகசிய தகவல்
கைது