திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் சொகுசு கார் ஓட்டியதில் சிறிய உணவகத்தை நடத்தி வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். வாகனத்தை இயக்கிய அந்த சிறுவன் நீதிபதி ஒருவரின் மகன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த சிறாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறார்கள் கார் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்ற கடுமையான விதி இருக்கும் போதிலும், சிறார்களை வாகனம் இயக்க அனுமதிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. இது பல நேரங்களில் மோசமான விபத்திற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டி சென்ற சொகுசு கார் மோதியதில், ஸ்கூட்டரில் சென்ற 55 வயது நபர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய சிறுவனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஜெயபாலகிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அப்பகுதியில் சிறிய உணவகத்தை நடத்தி வந்திருக்கிறார். அதிகாலையில் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் அவரது வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் கார், நீதிபதி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவரது 17 வயது மகன்தான் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. விபத்துக்கு பிறகு காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் இருக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்து நடந்தபோது சிறுவன் மது அருந்தியிருக்கவில்லை என தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதை உறுதி செய்ய அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக உயிரிழந்த ஜெயபாலகிருஷ்ணனின் உறவினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனது மாமா உணவகம் நடத்தி வந்தார். நள்ளிரவு கடையை மூடிவிட்டு, வேலையை எல்லாம் பார்த்துவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது. கார் அதிவேகத்தில் வந்திருக்க வேண்டும். கார் மோதியதில் ஸ்கூட்டர் மிக மோசமாக சேதமடைந்ததுடன், அதில் அவர் எடுத்து சென்ற பொருட்களும் சாலையில் சிதறியது. இந்த கொடூர விபத்தில் எனது மாமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்" என்றார். காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தையைச் சந்தித்தபோது, ஓட்டுநர் உரிமம் இல்லாத மைனர் சிறுவனை கார் ஓட்ட அனுமதித்தது ஏன் என்று கேட்டதாகவும், அதற்கு அவர் மரியாதையற்ற முறையில் பதிலளித்ததாகவும் அந்த பெண் குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என நம்புவதாக தெரிவித்த அவர் ,ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட கூடாது என்பதற்கு இந்த சம்பவம் அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கேரளா
நீதிபதி மகன் ஓட்டிய கார்
நள்ளிரவில் நடந்த விபத்து
நீதி நிலைநாட்டப்படும்