திருவனந்தபுரம்: ஏகப்பட்ட கடன் வாங்கி.. புது வீடு கட்டி விட்டோம். எந்த பொருளை கிப்டாக கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம்! பணம் கொடுத்தால் இன்னமும் வசதியாக இருக்கும்.. என்று சொல்லி உறவினர் வீட்டின் CCTV கேமரா முன்பு நின்று, கிரகபிரவேசத்திற்கு ஒருவர் பாட்டுப்பாடி அழைப்பு விடுத்துள்ள சம்பவம் பரவலாக கவனம் பெற்றிருக்கிறது.
ஒரு காலத்தில், வீட்டில் விசேஷம் எனில் சொந்த பந்தங்களை அழைப்பது மரபாக இருந்தது. ஆனால், இப்போது மொய் பணத்திற்காக கட்டாய அழைப்பு விடுக்கப்படுகிறது. இப்படித்தான் கேரளாவிலும் அந்த சம்பவம் நடந்திருக்கிறது.
புதியதாக வீடு கட்டியவர், தனது சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு சென்று கிரகப்பிரவேசத்திற்கான பத்திரிகையை வைத்திருக்கிறார். ஆனால் இவர் பெரிதும் எதிர்பார்த்து சென்ற உறவினர், வீட்டில் இல்லை. வீடு பூட்டப்பட்டிருக்கிறது.. ரொம்ப தூரத்திலிருந்து வந்துட்டு.. பத்திரிகை வைக்காம எப்படி போகுறது? என்று யோசித்த புது வீடு கட்டியவர்.. எப்படியாவது உறவினரை தன் வீட்டு வர வைத்துவிட வேண்டும் என்று.. அந்த வீட்டின் சிசிடிவி கேமரா முன்பு போய் நின்றுக்கொண்டு.. அழைப்பு விடுத்திருக்கிறார். "ரொம்ப கஷ்டப்பட்டு.. எக்கச்சக்க கடன் வாங்கி.. புது வீடு கட்டிட்டேன். டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி வைத்திருக்கிறேன். இருந்தாலும்.. நீங்க என்ன கிப்ட் வாங்கி தந்தாலும் ஓகேதான். பணமாக கொடுத்தால் இன்னும் சந்தோஷம்" என்று கூறியிருக்கிறார். இந்த சிசிடிவி வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும்.. ஒரு காலத்தில் மரபு சார்ந்த விஷயமாக இருந்தது.. இப்போது பணம் சார்ந்த விஷயமாக மாறியிருக்கிறது என்று கமென்ட் செய்துள்ளனர். கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் இதுபோன்ற நடைமுறை இருக்கிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இதற்கு தனியாக 'தேவை' என்று பெயரே இருக்கிறது. விஷேஷத்திற்கு கண்டிப்பாக போக வேண்டும்.. நம் வீட்டு சுக துக்கங்களுக்கு வந்தபோது.. அவர்கள் எழுதிய மொய் எவ்வளவு என்பதை கணக்கு செய்து.. அதைவிட கொஞ்சம் கூடுதலாக.. அட்லீஸ்ட் அதே அளவாவது செய்துவிட வேண்டும். செய்யவில்லை எனில், நாளை பின்னே நம் வீட்டு விஷேஷத்திற்கு யாரும் வர மாட்டார்கள். இதற்கு பெயர்தான் 'தேவை'. நம்ம ஊருல இப்படி இருக்கும் போது.. கேரளா மக்களை பார்த்து கமென்ட் செய்வதெல்லாம் ஓவரா இல்லையா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே!மொய் பணம்