திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கான போனஸ் மற்றும் பண்டிகை கால முன்பணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன... அதேபோல கேரள மாநில மதுபானக் கழக (BEVCO) ஊழியர்களுக்கான ஓணம் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது; இந்த ஆண்டும் போனஸ் தொகை ரூ.1 லட்சத்தை தாண்டியிருக்கிறது..
கேரளாவில் விரைவில் ஓனம் பண்டிகை வரப்போகிறது.. இந்த பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கான போனஸ் மற்றும் பண்டிகை கால முன்பணத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.
நிதித்துறையின் ஆகஸ்ட் 14 தேதியிட்ட உத்தரவின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4500 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போனஸை பெற தகுதியற்ற ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் சிறப்புப் பண்டிகை படியாக வழங்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள் எல்லாருக்குமே 20 ஆயிரம் ரூபாய் ஓணம் முன்பணமாக வழங்கப்படுகிறது. பகுதிநேர மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வழங்கப்படும். பொதுப்பணி ஆணையத்தின் மூலம் நியமிக்கப்பட்ட உதவிப் பள்ளி ஆசிரியர்கள், ஊதிய விகித அடிப்படையில் சம்பளம் பெறும் பகுதிநேர ஆசிரியர்கள், உதவி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் முழுநேர மற்றும் பகுதிநேர தற்காலிக ஊழியர்கள், மற்றும் மாநகராட்சிகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் மானியம் பெறும் நிறுவனங்களில் deputation முறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இந்த போனஸ் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். ஆனால் போனஸ் மற்றும் முன்பணத் தொகையில் கடந்த ஆண்டிலிருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனிடையே, BEVCO ஊழியர்கள் அதாவது கேரள மாநில மதுபானக் கழகமான பெவ்கோ ஊழியர்களுக்கான ஓணம் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெவ்கோ நிர்வாக இயக்குனர் யோகேஷ் குப்தா இந்த போனஸ் பரிந்துரையை வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில், ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 1,05000 ரூபாய் போனஸ் வழங்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட 2500 ரூபாய் அதிகமாகும். அதுமட்டுமல்லாமல் ஊழியர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டு, அது 7 தவணைகளாக சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். அதேபோல வேலைவாய்ப்பு பரிமாற்ற ஊழியர்களின் போனஸும், 250 ரூபாய் உயர்த்தப்பட்டு 6,250 ரூபாயாக வழங்கப்படுகிறது. தற்காலிக பணியாளர்களுக்கு 6,500 ரூபாய் ஊக்கத்தொகையும், துப்புரவுப் பணியாளர்களுக்கு 6,750 ரூபாயும் வழங்கப்படுகிறது. தலைமை அலுவலகம் மற்றும் கிடங்குகளில் பணிபுரியும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு 13,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி பெவ்கோ நிறுவனம் 124.10 கோடி ரூபாய் லாபத்தில் இருந்தது. ஆனால், கலாநிதி வரி அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த வருடம் அதாவது மார்ச் 31 நிலவரப்படி, நிறுவனம் 281.95 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அப்படியிருந்தும்கூட ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த வரிச்சுமை விவகாரம் குறித்து நிதியமைச்சகத்துடன் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை அமைச்சர் எம். லிஜு உறுதி தந்துள்ளார். மேலும் லாட்டரி விற்பனையாளர்களுக்கு ஓணம் போனஸ் தொகையை 1000 ரூபாய் உயர்த்தி வழங்குவது குறித்த அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. 281 கோடி ரூபாய் நஷ்டத்திலும் மதுபானக் கழக ஊழியர்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ள இந்த சலுகைகள், மாநில நிதித்துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் குறிப்பிட்ட அந்த கலாநிதி வரிச்சுமை விவகாரத்தில் நிதியமைச்சகத்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி, இப்போது திருவனந்தபுரம் அரசு வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது....!!கேரளா ஓனம் பண்டிகை
அரசு ஊழியர்களுக்கு போனஸ்
ஊக்கத்தொகை + போனஸ்
மதுபானக் கழக ஊழியர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள்