கச்சா எண்ணெய் குறையுது ஓகே.. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறையாது! மத்திய அமைச்சர் திட்டவட்டம்

  • திருவனந்தபுரம்: வளைகுடா போர் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக உயர்ந்தது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல்- டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இருப்பினும், கச்சா எண்ணெய் குறைந்தாலும் பெட்ரோல்- டீசல் விலை குறையாது என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

    Advertisement

    வளைகுடா போர் கடந்த பிப்ரவரி மாதம் முதலே தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் ஒட்டுமொத்த உலகிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே அமெரிக்கா ஈரான் இடையே அமைதி ஏற்பட்டது. முதற்கட்டமாக இப்போது இரு நாடுகளுக்கும் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    கச்சா எண்ணெய்

    இருப்பினும், இடைக்கால அமைதி ஒப்பந்தம் வந்த பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரியளவில் குறைந்துள்ளது. போர் உச்சத்தில் இருந்த போது பேரல் கிட்டத்தட்ட 120 டாலர் வரை போன நிலையில், இப்போது 77 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உடனடியாக குறைக்கப்படாதாம். இதற்கான காரணங்களாக அமைச்சர் சுரேஷ் கோபி குறிப்பிட்டுள்ளார்.

    விலை குறையாது

    சர்வதேச சந்தையில் விலை குறைந்தவுடன், அந்த குறைந்த ரேட்டில் கச்சா எண்ணெய் உடனடியாக இந்தியாவிற்கு வந்துவிடாது. வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வரக் கால அவகாசம் தேவைப்படுகிறது. குறிப்பாக, ஹார்முஸ் வழியாகத்தான் இந்த கப்பல்கள் வர வேண்டும். அங்கு தற்போது கப்பல் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், நிலைமை சீராகிக் குறைந்த விலை எண்ணெய் இந்தியாவை வந்தடைய நேரம் எடுக்கும் என்று பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அவர் மேலும் கூறுகையில், "கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆசியாவில் போர் தொடங்கியதில் இருந்து, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. அந்த சமயத்தில் பொதுமக்களைப் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களின் சுமையை ஓரளவிற்குத் தாங்கிக்கொண்டது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

    காரணம் என்ன

    எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை மக்கள் மீது முழுமையாகச் சுமத்தாமல் இருக்க, மத்திய அரசு சுமார் 12,000 கோடி ரூபாய் இழப்பை ஏற்றுக்கொண்டது. மத்திய அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டும், அதே சமயம் எண்ணெய் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்காத சூழல் இருக்க வேண்டும். எரிபொருள் விலை உயர்ந்தபோது, எந்த மாநில அரசும் தங்களின் வருவாயை குறைத்துக்கொண்டு கலால் வரியைக் குறைக்க முன்வரவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    Advertisement

    சமீபத்தில் பெட்ரோல் - டீசல் விலை சுமார் 4 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டது. அது பொதுமக்களைப் பாதிக்கிறது என்பது புரிகிறது. ஆனால், சர்வதேச விலை குறைந்தவுடன் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை உடனடியாகத் திரும்பப் பெற முடியாது" என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

    கேரளா எய்ம்ஸ்

    அதேபோல கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்தும் சுரேஷ் கோபி சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.. இது தொடர்பாக அவர், "எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பது என்பது சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்குவது போன்ற எளிதான காரியம் அல்ல. அதற்கு என்று முறையான நடைமுறைகள் உள்ளன. எய்ம்ஸ் அமைக்கத் தகுதியான இடங்களை மாநில அரசு அடையாளம் கண்டு, அது குறித்த விவரங்களை மத்திய குழுவிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னரே கலந்தாலோசனை நடத்தி இடம் தேர்வு செய்யப்படும்" என்றார்.

    English Summary

    Union Minister Suresh Gopi clarified that domestic petrol and diesel prices will not decrease immediately(இந்தியாவில் பெட்ரோல் விலை குறையாது என சுரேஷ் கோபி தகவல்): Petrol rate will not reduce after crude oil drop.