திருவனந்தபுரம்: டெல்லியில் நடந்த மாணவர் போராட்டம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் மோகன்தாஸ் கூறிய சில கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் பெண்களை கூட்டு பலாத்காரம் செய்தும் போராட்டத்தை ஒடுக்கி இருப்பேன் என அவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நீட் முறைகேடுகள் தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி டெல்லியில் நடத்திய போராட்டம் நாடு முழுக்க பரவியது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த பிறகே இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே டெல்லி மாணவர் போராட்டம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் ஆதரவாளரும் பாஜகவின் முன்னாள் கேரள நிர்வாகியுமான டி.ஜி. மோகன்தாஸ் கூறிய சில கருத்துகள் சர்ச்சையை கிளப்புவதாக இருக்கிறது.
அதாவது டெல்லியில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை சுட்டுக் கொன்றிருப்பேன் என்றும் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பார்கள் என்றும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். டி.ஜி. மோகன்தாஸ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட சுமார் 30 நிமிட வீடியோவில், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சி நடத்திய மாணவர் போராட்டம் குறித்து பேசினார். அந்த வீடியோவில், ஜந்தர் மந்தர் பகுதியில் தான் பொறுப்பில் இருந்திருந்தால் போராட்டத்தை ஒரே நாளில் ஒடுக்கியிருப்பேன் என்று கூறினார். அவர் மேலும், "ஜந்தர் மந்தரைச் சுற்றி சுமார் 4 சதுர கிலோமீட்டர் ஊரடங்கு அமல்படுத்துவேன். பின்னர் மூன்று முறை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுப்பேன். அதன் பிறகும் கலைந்து செல்லாவிட்டால் துப்பாக்கி சூடு நடத்துவேன். உயிர் பிழைக்க மக்கள் ஓடி சிதறிவிடுவார்கள். சிலர் உயிரிழக்கலாம். சிலர் நிரந்தர மாற்று திறனாளிகளாக மாறலாம். ஆனால், அடுத்த 4 மணி நேரத்தில் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும். அதன் பிறகு உடல்களை மருத்துவமனைக்கு அனுப்புவேன்" என்றார். அதேபோல அந்த வீடியோவி் இன்னொரு இடத்தில் போராட்டங்களில் பங்கேற்கும் பெண்கள் குறித்து அருவறுக்கத்தக்க வகையில் சில கருத்துகளை கூறியிருக்கிறார். அந்த நபர், "அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமைகள் நடக்கும். ஆனால் இதில் புகார் எதுவும் இருக்காது. ஏனெனில் பாலியல் வன்கொடுமையை விரும்பும் பெண்கள் தான் அவர்கள்! குறிப்பாக இடதுசாரிகள், மதச்சார்பற்றவர்கள், ஜனநாயக ஆதரவாளர்கள், தொழிலாளர் ஆதரவாளர்கள். இதில் யாராவது உயிரிழந்தால் அவர்களை தியாகியாக மாற்றிவிடுவார்கள்" என்றார். அவரது இந்த கருத்துகள் மிக பெரியளவில் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு தரப்பினரும் மோகன்தாஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மோகன்தாஸின் இந்த கருத்துகள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஏ.ஏ. ரஹீம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இது தான் பாஜகவின் உண்மையான சிந்தனை. கேரளாவில் பாஜக தலைவர்கள் நேரடியாக சொல்ல முடியாத கருத்துகளை டி.ஜி. மோகன்தாஸ் மூலம் சொல்ல வைக்கிறார்கள். சமூகத்தில் பிளவை ஏற்படுத்தவே இப்படி எல்லாம் பேசுகிறார்கள். இது போன்ற வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. தேவையான சட்ட நடவடிக்கை எடுப்போம்" என்றார். இதற்கிடையே மோகன்தாஸின் கருத்துகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ஆர்எஸ்எஸ் விளக்கம் கொடுத்துள்ளது. மோகன்தாஸின் கருத்துகள் அவரது சொந்த கருத்துகள் என்றும் அதற்கும் ஆர்எஸ்எஸுக்கும் தொடர்பில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது. மேலும், "மோகன்தாஸ் ஆர்எஸ்எஸின் நிர்வாகி இல்லை. அவர் எந்த பொறுப்பிலும் இல்லை.. இதுபோன்ற கருத்துகள் மிக கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.சர்ச்சை பேச்சு
சுட்டு கொல்வேன்
கூட்டு பலாத்காரம்
கடும் கண்டனம்
ஆர்எஸ்எஸ் விளக்கம்