திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சராக வி.டி.சதீசன் இன்று பதவியேற்கிறார். இந்நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பங்கேற்கவில்லை.
கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. பெரும்பாலான தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கிறது.
இருப்பினும் கேரளத்தின் புதிய முதலமைச்சர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. போட்டியில் பலர் இருந்த நிலையில், வி.டி.சதீஷனை கட்சி தலைமை தேர்ந்தெடுத்திருக்கிறது. இன்று அவர் முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை. அதேபோல முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவரும் பங்கேற்கவில்லை. தொடக்கத்தில் பங்கேற்பதற்காகத்தான் இருந்தது என்றும், கடைசி நேரத்தில் அவரது திருவனந்தபுரம் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸை பொறுத்தவரை, தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. இருப்பினும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் இருந்ததால், காங்கிரஸ் முன் வந்து தங்களின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை கொடுத்தது. இதற்கு கைமாறாக காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஏறத்தாழ காங்கிரஸின் கதை முடிந்துவிட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சர் பதவியை கட்சி பெற இருப்பது, அக்கட்சியை மீண்டும் புத்துணர்வு பெற செய்திருக்கிறது. இந்த கூட்டணி பின்னணியில், கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் விஜய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.