கேரள முதலமைச்சராக சதீசன்! உள்துறை அமைச்சரான ரமேஷ் சென்னிலதா! அமைச்சரவையில் முக்கிய புள்ளிகள்

  • திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சராக வி.டி.சதீசன் இன்று பதவியேற்றார். இந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல புதியதாக அமைய உள்ள அமைச்சரவையில் ரமேஷ் சென்னிலதா உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    காங்கிரஸின் மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதலா, புதிய அமைச்சரவையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை பொறுப்பை ஏற்கவுள்ளதாகப் பதவியேற்புக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கேரளாவில் சட்ட ஒழுங்கை மேம்படுத்தி, மக்களுக்கு மிகச்சிறந்த நல்லாட்சியை வழங்குவதே தனது முதல் கடமை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அதேபோல, தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்த 5 முக்கிய உத்தரவாதங்களை புதிய அரசு உடனடியாகச் செயல்படுத்தும் என்று சென்னிதலா உறுதியளித்துள்ளார்.

    • பெண்களுக்குப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
    • கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை.
    • நலத்திட்ட ஓய்வூதியங்களை ரூ.3,000 ஆக உயர்த்துதல்.
    • ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான 'உம்மன் சாண்டி காப்பீட்டுத் திட்டம்'.
    • சிறு தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியற்ற கடன்.

    என ராகுல் காந்தி வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற ரமேஷ் சென்னிலதா உறுதியளித்திருக்கிறார்.

    இன்று காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் வி.டி.சதீசன் முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் சேர்த்து மொத்தம் 20 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

    Advertisement

    ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதரன், சன்னி ஜோசப் (KPCC தலைவர்), ஏ.பி.அனில்குமார், டி.சித்திக், பி.சி.விஷ்ணுநாத், ரோஜி எம்.ஜான், பிந்து கிருஷ்ணா, எம்.லிஜு, கே.ஏ.துளசி, ஓ.ஜே.ஜனீஷ் என காங்கிரஸ் தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    இது தவிர IUML, KC, RSP போன்ற கூட்டணி கட்சி தலைவர்களான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, பி.கே.பஷீர், என்.ஷம்சுதீன், கே.எம்.ஷாஜி, வி.இ.அப்துல் கபூர், மொன்ஸ் ஜோசப், ஷிபு பேபி ஜான், அனூப் ஜேக்கப், சி.பி.ஜான் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    காங்கிரஸின் மூத்த தலைவர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் சபாநாயகராகவும், ஷானிமோல் உஸ்மான் துணைச் சபாநாயகராகவும், அப்பு ஜான் ஜோசப் அரசின் தலைமை கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    VD Satheesan was sworn in as the Chief Minister of Kerala today. Leaders including Rahul Gandhi, the Leader of the Opposition in the Lok Sabha, and Congress MP Priyanka Gandhi participated in the ceremony. Similarly, senior leaders, including Ramesh Chennithala, have been allocated positions in the new cabinet set to be formed.