படிச்சு படிச்சு சொன்ன கலெக்டர்.. அலட்சியப்படுத்திய பில்டர்கள்.. வயநாட்டில் உண்மையில் நடந்தது என்ன?

  • திருவனந்தபுரம்: இன்றைய தினம் ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கும் வகையில், அங்கு வயநாடு மாவட்டத்தில் சுரங்கப் பாதை பணிகள் நடைபெற்று வந்த கல்லடி-மீனாட்சி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதற்கிடையே மண்சரிவு ஏற்படுவதற்கு முன்பே, அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணை உடனடியாக அகற்றுமாறு வயநாடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டதே விபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

    Advertisement

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் ஆரம்பித்தாலே நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமாகவே இருக்கும். இந்த மோசமான சம்பவத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் சூழலில், இந்த விபத்து தொடர்பாக சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Advertisement

    வயநாடு கலெக்டர்

    இருப்பினும் இந்த மண்ணை அகற்றுமாறு வயநாடு கலெக்டர் முன்கூட்டியே எச்சரித்தது இப்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதாவது கடந்த ஜூன் 20-ஆம் தேதி, வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகஸ்ரீ, மீனாட்சி பகுதி சுரங்கத் திட்டப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். சுரங்க பணிகளின்போது வெட்டி எடுக்கப்பட்ட மண் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்ததால், அவற்றை முழுமையாக அகற்றும் வரை பணிகளைத் தொடரக் கூடாது என்று கலெக்டர் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

    யார் காரணம்?

    இந்த சுரங்க பணிகளை கொங்கண் ரயில்வே கார்ப்பரேஷன் செயல்படுத்தி வருகிறது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த திலீப் பில்ட்கான் நிறுவனம் சுரங்கத் தோண்டும் பணிகளையும், கொல்கத்தாவைச் சேர்ந்த ராயல் கன்ஸ்ட்ரக்ட் நிறுவனம் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. கோழிக்கோட்டின் அனக்கம்பொயிலையும், வயநாட்டின் மேப்பாடியையும் இணைக்கும் இந்த சுரங்கம் 8.2 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். ரூ.2,400 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்தத் திட்டம், கோழிக்கோடு வயநாடு பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது.

    Advertisement

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் இந்தத் திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை உறுதி செய்தது. அதே நேரத்தில், கட்டுமானப் பணிகளின் போது சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்பட்டால், அதைச் சட்ட ரீதியாக எதிர்க்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

    கேரள முதல்வர் சதீசன்

    இதற்கிடையில் சம்பவம் குறித்து கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் சில முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். சம்பவம் நடந்த பகுதியில் 225 செ.மீ. மழை பதிவாகியிருந்ததுடன், மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அவர் மேலும், "பொதுப்பணித்துறை அமைச்சர் பி.கே. பஷீர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இது தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தனர். மழைக் காலம் ஆரம்பித்துவிட்டதால் அங்கு கொட்டி வைக்கப்பட்டு இருந்த மண்ணை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தி இருந்தார்கள்.

    Advertisement

    என்ன நடந்தது?

    சம்பவம் நடந்த பகுதியில் இருந்த மண் மிகவும் தளர்வாக இருந்தது. சுரங்கம் தோண்டும்போது எடுக்கப்பட்ட மண் அங்கேயே குவித்து வைக்கப்பட்டதால் அது நிலைத்தன்மையை இழந்தது. பேரிடர் மேலாண்மை ஆணையமும் கூட அந்த மண்ணை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தியிருந்தது. இவ்வளவு எச்சரிக்கை வந்த பிறகும் மண்ணை அகற்றாமல் இருந்துள்ளனர். அதுவே இந்த மண்சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது" என்று அவர் தெரிவித்தார். முறையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்படாததே விபத்திற்குக் காரணம் என்பதை சதீசன் திட்டவட்டமாக மறுத்தார். தொடர்ந்து பெய்த கனமழையும், அகற்றப்படாமல் குவிக்கப்பட்டிருந்த மண்ணும் தான் இந்த விபத்துக்கு வழிவகுத்ததாக அவர் விளக்கமளித்தார்.

    Advertisement

    இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். சுரங்கத் திட்டப் பணிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா, மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கை ஏன் பின்பற்றப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    English Summary

    Days before the Wayanad tunnel landslide, the district collector reportedly warned contractors to remove excavated soil accumulated(வயநாடு நிலச்சரிவு அதிர வைக்கும் தகவல்): Wayanad Landslide latest news in tamil.