ஓடிக்கோடா.. மக்களை அடித்து சென்ற வெள்ளம்.. வயநாடு நிலச்சரிவின் அதிர்ச்சி வீடியோ.. அலறி ஓடிய மக்கள்

  • திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையில் இருந்து வெள்ளம், மண் + கற்களோடு நிலச்சரிவு ஏற்பட்டதை பார்த்து சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் கல்லாடி அருகே மீனாட்சி மேம்பாலத்தின் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் அனக்கொம்பொயில் -மேம்பாடி சுரங்க ரோடு திட்டம் நடந்து வருகிறது.

    Advertisement

    வழக்கம்போல் இன்று ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் தான் அதன் அருகே திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தற்போது வரை 3 பேர் பலியாகி உள்ள நிலையில் இன்னும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே தான் நிலச்சரிவின்போது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ இணையதளங்களில் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அதில் மலையில் இருந்து பேரிரைச்சலுடன் மண் மற்றும் கற்களை அடித்து கொண்டு வெள்ளம் சீறிப்பாய்கிறது. வளர்ந்து நிற்கும் மரங்களையும் இந்த வெள்ளம் முறித்தபடி வருகிறது. இந்த சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தை கண்இமைக்கும் நொடியில் இந்த வெள்ளம் தாக்குகிறது.

    Advertisement

    இந்த சத்தம் கேட்டு அருகே உள்ள கடையில் இருந்து பலரும் வெளியே ஓடிவந்து பார்க்கின்றனர். மண், கல் மற்றும் மரங்களோடு அடித்து மினி சுனாமி போல் வரும் வெள்ளத்தை பார்த்து அவர்கள் அலறியடித்து ஓடுகின்றனர். இந்த வெள்ளம் என்பது பணியாளர்களின் வேன், தண்ணீர் டேங்கர் உள்ளிட்ட வாகனங்களையும் அடித்து செல்கிறது. இதில் பலரும் அடித்து செல்லப்படுகின்றனர். இதுபோல் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    மேலும் அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அதில், மண், கற்களை அடித்து கொண்டு ஆக்ரோஷமாக கடல் அலை போல் வெள்ளம் தாக்குகிறது. வீடியோவில் 'ஓடிக்கோடா' என்ற வார்னிங் செய்யும் சத்தம் பதிவாகி உள்ளது. வயநாட்டில் இந்த நிலச்சரிவுக்கு முக்கிய காரணம் அங்கு விடாமல் பெய்து வரும் மழை தான் காரணம் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    வயநாடு ஏற்கனவே நிலச்சரிவு அபாயம் உள்ள இடமாகும். இதற்கு முன்பு அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பருவமழை காலத்தில் நிலச்சரிவு அடிக்கடி ஏற்படும். அந்த வகையில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அந்த பகுதியில் 265 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக தான் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி நள்ளிரவு 1.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முண்டக்கை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 298 பேர் வரை பலியாகினர். மேலும் பலர் மாயமாகினர். இந்த நிலச்சரிவு என்பது வயநாடு வரலாற்றில் மிகவும் கொடூரமானதாக இன்று வரை உள்ளது. அதன்பிறகு லேசான நிலச்சரிவு மட்டுமே நடந்து வந்த நிலையில் வயநாட்டில் இன்று மீண்டும் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    English Summary

    Wayanad Landslide Video: A landslide has occurred again today in Wayanad, Kerala. A video showing workers engaged in tunnel construction scrambling to flee in panic upon seeing a sudden surge of floodwaters carrying soil and rocks is currently going viral online.