திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடியில் இன்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு நடைபெற்று வரும் சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் இந்த விபத்து நேரிட்டதால், ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. முதற்கட்ட தகவலின்படி 2 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு 2024ம் ஆண்டு இதேபோல ஜூலை மாதத்தில் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. இதில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். இப்படி இருக்கையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் 'ஆனைக்கம்பொயில் - மேப்பாடி' இரட்டைச் சுரங்கப்பாதை திட்டப் பணிகள் கல்லாடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே நடைபெற்று வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த 226 மி.மீ கனமழை காரணமாக, இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாகச் செயல்பட்ட கன்டெய்னர்கள், தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் ஆகியவை முழுமையாக மண்ணில் புதைந்தன. தகவலறிந்ததும் கல்பற்றாவில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் ஒருவரது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த 5 பேர் அருகில் உள்ள ஹாரிசன் மலையாளம் எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), காவல்துறையினர் மற்றும் விரைவு அதிரடிப்படையினர் (RRT) தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்ணுக்குள் சுமார் 30 முதல் 50 தொழிலாளர்கள் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் குறித்து கேரள முதல்வர் வி.டி. சதீசன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் டி. சித்திக் மற்றும் ஏ.பி. அனில்குமார் ஆகியோரை உடனடியாக வயநாட்டிற்குச் செல்ல அவர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.என்ன நடந்தது?
மீட்புப் பணிகள்
அரசு நடவடிக்கை