முன்கூட்டியே எச்சரித்த நிபுணர் குழு.. கண்டுகொள்ளாத காண்டிராக்டர்? வயநாடு நிலச்சரிவு.. காரணம் இதுதான்

  • வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கல்லடி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கல்லடி மேப்பாடி சுரங்க திட்டமே இந்த விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருந்த மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு, இங்கு கடுமையான நிலச்சரிவு அபாயம் உள்ளதாக முன்கூட்டியே எச்சரித்திருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.

    Advertisement

    வயநாட்டின் கல்லடி மற்றும் கோழிக்கோட்டின் மேப்பாடியை இணைக்கும் 8.753 கி.மீ. நீளமுள்ள சுரங்கச் சாலைத் திட்ட கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இந்தச் சூழலில் தான் கேரளாவில் பெய்யும் கனமழையில் அந்த சுரங்கத்திற்கு அருகே கொட்டி வைக்கப்பட்ட மண் சரிந்ததில் மோசமான விபத்து ஏற்பட்டது. இதுவரை இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Advertisement

    சுற்றுச்சூழல் அனுமதி

    இதற்கிடையே இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருந்த மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் ரிப்போர்ட்டில் இருக்கும் சில பகீர் தகவல்கள் இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது இந்த திட்டத்திற்கு கடந்த 2025 மார்ச் 2ஆம் தேதி, மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. ரூ.2,043.74 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்தபோதும், பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் அபாயங்கள் இருப்பதாக SEAC சுட்டிக்காட்டியிருந்தது.

    எச்சரிக்கை

    சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ள பகுதி மிகவும் பலவீனமான நில அமைப்பைக் கொண்டது என்பதே வல்லுநர் குழு மிக தெளிவாக குறிப்பிட்டு இருந்தது. 2019ல் புதுமலையிலும், 2024ஆம் ஆண்டு முண்டக்கை- சூரல்மலையிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட பகுதிகளுக்கு அருகிலேயே இந்தத் திட்டம் அமையவுள்ளது என்பதால், கூடுதல் முன்னெச்சரிக்கை அவசியம் என தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    மேலும், திட்டப்பகுதியை ஒட்டிய 10 கி.மீ. சுற்றளவில் நீலகிரி காப்பகம் அமைந்துள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள பல அரிய பறவை இனங்கள் மற்றும் வனவிலங்குகள் இப்பகுதியில் வாழ்வதால் இந்த திட்டம் அந்த பறவை மற்றும் விலங்குகளின் வாழ்விடத்தை பாதிக்கக்கூடும் என்பதையும் வல்லுநர் குழு சுட்டிக்காட்டியிருந்தது..

    பல்வேறு பாதிப்புகள்

    இது மட்டுமின்றி இந்த சாலை திட்டம் அமையும் பகுதிக்கு அருகே நான்கு பழங்குடியினர் குடியிருப்புகள் உள்ளன. அதில் 27 குடும்பங்கள் வசிக்கும் அரணமலை கட்டுநாயக்கா காலனி நேரடியாகப் பாதிக்கப்படும் பகுதியாக அடையாளம் காணப்பட்டதால்.. அவர்களுக்கு உரிய இழப்பீடு, மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வல்லுநர் குழு வலியுறுத்தியது.

    Advertisement

    திருவம்பாடி மற்றும் வெள்ளரிமலை கிராமங்கள் Ecologically Sensitive Area எனப்படும் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளாக இருப்பதையும் வல்லுநர் குழு குறிப்பிட்டது. சுரங்கத்தின் மொத்த நீளத்தில் சுமார் 80 சதவீதம், அதாவது 5.76 கி.மீ., வனப்பகுதி வழியாகச் செல்கிறது. இதற்காக 17.263 ஹெக்டேர் வன நிலம் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது..

    விரிவான ஆய்வு

    திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி பொதுப்பணித்துறை முதலில் தாக்கல் செய்த அறிக்கையில், நிலச்சரிவு அபாயம், வெடிவைத்து சுரங்கம் அமைப்பதால் ஏற்படும் அதிர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்த விளக்கம் இல்லை. இதையடுத்து 28 கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. அதன் பிறகும் அறிக்கையில் பல குறைபாடுகள் இருந்ததால், கடந்த கால நிலச்சரிவுகள் குறித்த விரிவான ஆய்வு தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு வல்லுநர் குழு கேட்டு கொண்டது.

    Advertisement

    மேலும், இந்த சுரங்கம் அமையும் பகுதியில் இரண்டு சிறிய புவிப் பிளவு கோடுகள் இருப்பதையும் வல்லுநர் குழு கண்டறிந்தது. இருப்பினும் அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று மதிப்பிடப்பட்டது.

    சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தணிக்க முதலில் ரூ.1.02 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. இது போதுமானதல்ல என வல்லுநர் குழு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகை ரூ.15 கோடியாக உயர்த்தப்பட்டது. எனினும், யானைகள் வழித்தடத்தை மீட்டெடுப்பது மற்றும் பழங்குடியின மக்களின் மறுவாழ்வு ஆகியவற்றுக்கு இந்த தொகையும் போதுமானதல்ல என வல்லுநர் குழு கருத்து தெரிவித்திருந்தது.

    அந்த ஒரு தவறு

    இந்த விரிவான மதிப்பீட்டிற்கு பிறகே சுரங்க பணிகளுக்கு அனுமதி தரப்பட்டது. அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் 25 கட்டுப்பாடுகளையும் வல்லுநர் குழு விதித்தது. அவற்றில் முக்கியமாக கட்டுமான கழிவுகள் மற்றும் பொருட்களைச் சாலைகள், நடைபாதைகள் வெளியே எங்கும் கொட்டக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுபோல கொட்டியிருந்த மணலே சரிந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    Despite concerns over landslide risks, Wayanad tunnel project received environmental clearance after multiple revisions and strict mitigation conditions(கேரளாவில் ஏற்பட்ட மிக பெரிய நிலச்சரிவு): kerala Wayand landslide latest news in tamil.