விஜய் கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? பின்னணி என்ன?

  • திருவனந்தபுரம்: கேரள முதல்வராக விடி சதீஷன் இன்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் காரணங்களே இந்த முடிவுக்கு பின்னணி என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    கேரள முதல்வராக விடி சதீஷன் இன்று பதவியேற்றுக்கொண்டார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    Advertisement

    விஜய் பங்கேற்காதது ஏன்?

    இதனால், விஜய் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவரது கேரள பயணம் ரத்தானது. விஜய் கேரள பயணத்தை ரத்து செய்தது ஏன்? என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு கேரளாவிலும் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதால், பெரிய எண்ணிக்கையில் ரசிகர்கள் அவரை பார்க்க வரக்கூடும்.

    இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினமான ஒன்றாக இருக்கும். ஏற்கனவே, பல விஐபிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ள சூழலில், விஜய் பங்கேற்றால் கூட்டத்தை சமாளிக்க கடும் சவால் ஏற்படும் என அதிகாரிகள் மதிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே விஜய்யின் கேரள பயணம் ரத்தாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    காங்கிரசுக்கு 2 அமைச்சர்கள் பதவி

    விஜய் இதற்கு முன்பாக கேரளா சென்ற போது, ரசிகர்கள் அவரை பார்க்க பெரிய அளவில் திரண்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு 108 இடங்கள் மட்டுமே கிடைத்தது. பெரும்பான்மை கிடைக்காத சூழலில் விஜய்யின் தவெகவிற்கு ஆதரவுக்கரம் நீட்டிய முதல் கட்சி காங்கிரஸ்தான்.

    அந்த கட்சிக்கு 5 இடங்கள் உள்ள நிலையில், தவெகவிற்கு தனது ஆதரவை வழங்கியது. காங்கிரஸ் கட்சிக்கு தவெக அமைச்சரவையில் இரண்டு இடங்கள் ஒதுக்கவும் விஜய் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கேரளாவில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு விஜய் செல்வார் என்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது.

    Advertisement

    டெல்லி செல்கிறார் விஜய்

    தென் இந்திய அரசியலில் பாஜகவுக்கு மாற்றான கூட்டணியின் பலத்தை காட்டும் விதமாக விஜய்யின் பங்கேற்பு பார்க்கப்படும் என்று கருதப்பட்ட நிலையில், விஜய் தனது பயணத்தை ரத்து செய்தது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது. இதற்கிடையே, விஜய் வரும் 22 ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேச விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    English Summary

    Vijay skipped Kerala CM V D Satheesan’s swearing-in ceremony reportedly due to security and crowd-control concerns. Vijay’s massive fan following in Kerala was expected to create heavy crowds, prompting officials to avoid logistical complications during the high-profile political event.