கொடைக்கானல் செல்ல சொர்க்கப்பாதை.. தமிழ்நாட்டிலேயே மிகவும் ஆபத்தான அடுக்கம் சாலை

  • தேனி: தேனியில் இருந்து பெரியகுளம் வழியாக கொடைக்கானல் செல்வோர் பெரும்பாலும் வத்தலக்குண்டுக்கு முன்பாக உள்ள காட்ரோடு பாதையைத்தான் தேர்வு செய்வார்கள். அதாவது தேவதானப்பட்டியை தாண்டி உள்ளே நேரடியாக மலையில் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையை பிடித்து செல்வார்கள். அந்த பாதை இல்லாமல் பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை, அடுக்கம் வழியாகக் கொடைக்கானல் செல்ல 13 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட பாதை உள்ளது. இது தான் தமிழ்நாட்டின் மிகவும் ஆபத்தான சாலையாகும். 26 கிமீ பயணித்தாலே 2,133 மீட்டர் கொண்ட கொடைக்கானலின் உச்சிக்கு போய்விட முடியும். இந்த உயரம் தான் ஊட்டி கல்லட்டி சாலையைவிட ஆபத்தான பயணமாக அடுக்கம் சாலை பயணத்தை மாற்றி உள்ளது.

    Advertisement

    கொடைக்கானலுக்கு அடுக்கம் வழியாக பலர் கார் மற்றும் பைக்கில் சென்று இருப்பீர்கள். ஆனால் கனரக வாகனத்தில் அல்லது பெரிய வாகனங்களில் அந்த சாலையில் யாராலும் போக முடியாது.. பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.. அனுமதித்தாலும் போய்விடவும் முடியாது. மிகவும் செங்குத்தான அந்த பாதையில் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களுக்கே மிகவும் சவாலானது. மாலை நேரங்களில் தனியாக இந்த சாலையில் யாரும் இறங்கிவிட மாட்டார்கள். அதேபோல் இரவில் இந்த சாலையில் வருவது கிட்டத்தட்ட பேய் சாலை போலவே தான் இருக்கும். மழை பெய்யும் போது, அல்லது பாதி வழியில் மழை பெய்தால் இந்த சாலை கார்களுக்கு பேராபத்தானது. ஏன் என்பதை விளக்கமாக பார்க்கலாம்.

    Advertisement

    பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை தாண்டி அடுக்கம் மலையேறும் செக்போஸ்ட் வரை 15 கிமீ வரை மலை அடிவாரத்தில் மிகஅற்புதமான பயணம் என்று உங்களை உணர வைக்கும். கடவுளின் பாதை போலவே இருக்கும். ஆனால் எமனின் எல்லை என்று சொல்லும் அளவிற்கு அடுக்கம் மலை ஏறும் பாதையான செக்போஸ்ட் இரு இருக்கும். இங்கு 13 கொண்டை ஊசி வளைவுகள் தான் இருக்கும். "வளைவுகளின் எண்ணிக்கை குறைவுதானே, அப்படி என்றால் எளிதாக இருக்குமே" என்று நினைத்துவிடக் கூடாது. வத்தலக்குண்டு சாலையில் உள்ள 14 கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அகலமானவை. ஆனால், அடுக்கம் பாதையில் உள்ள வளைவுகள் மிகவும் குறுகலானவை . வண்டியைத் திருப்புவதற்கே அசாத்திய திறமை வேண்டும். அனுபம் வாய்ந்த ஓட்டுநர்களே தயங்கி தயங்கி தான் போவார்கள்.

    Advertisement

    இந்தப் பாதை எவ்வளவு உயரமானது மற்றும் செங்குத்தானது என்பது தெரிந்தால் பயந்தே போவீர்கள்.. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,133 மீட்டர்கள் (கொடைக்கானலின் மொத்த உயரம்) உயரத்தை இந்தச் சாலை மிக குறுகிய கிலோ மீட்டரில் அடைகிறது.

    அறிவியல் அதிசயம்

    வத்தலக்குண்டு சாலை 50 கிலோமீட்டர் தூரம் எடுத்துக்கொண்டு மெதுவாக உயரத்தை ஏறும். ஆனால், இந்த அடுக்கம் சாலை வெறும் 26 கிலோமீட்டர் தூரத்திலேயே அதே 2,133 மீட்டர் உயரத்தை உங்களை அடைய வைத்துவிடும். இதன் அர்த்தம் என்னவென்றால், இந்தச் சாலை மிகக் கடுமையான செங்குத்து ஏற்றத்தைக் கொண்டது. இந்த சாலை ஊட்டி கல்லட்டி சாலைக்கு இணையான செங்குத்தான ஏறுமுகம் கொண்ட சாலையாகும்.

    Advertisement

    ஏன் இந்தச் சாலை மிக ஆபத்தானது?

    அடுக்கம் சாலையில் காரில் ஏறும்போது 1-வது அல்லது 2-வது கியரைத் தவிர வேறு கியர் பயன்படுத்தவே முடியாது. 4-வது கியர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேபோல, மலையிலிருந்து கீழே இறங்கும்போது 'பிரேக்' லைனர்கள் சூடாகி, பிரேக் ஃபெயிலியர் ஆக அதிக வாய்ப்புள்ள பாதை இது.இந்தச் சாலை மிகவும் குறுகலானது. எதிரே ஒரு கார் அல்லது அரசுப் பேருந்து வந்தால், ஒரு வண்டி ஓர ஒதுங்கிக் காத்து நிற்க வேண்டும். பின்நோக்கி எடுப்பது இங்கு மரண பயத்தைக் காட்டும். பின்னோக்கி செல்வது என்பது சாத்தியம் மிக குறைவு.

    Advertisement

    பலவீனமான பாறை

    இச்சாலை அமைந்துள்ள மலைப்பகுதி மிகவும் பலவீனமான பாறைகளைக் கொண்டது. லேசான மழை பெய்தால் கூட, மேலிருந்து பாறைகள் உருண்டு விழுவதும், ரோடு சரிந்து போவதும் இங்கே சகஜம். அதனால் மழை பெய்யும் போது இந்த சாலையில் காரில் போவது சொர்க்கத்திற்கு போவதற்கு (எமனை தேடி செல்வதற்கு) சமம்.. திரும்ப பெரியகுளத்திற்கு போய் இறங்கினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். அதேபோல் மேலே ஏறினால் பெருமாள் மலை போவதும் உங்கள் அதிர்ஷ்டம் தான்.

    அடுக்கம் கிராமம்

    பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் கிராமத்தை அடைந்ததும் வாகனத்தை நிறுத்தி பார்த்தால் எவ்வளவு செங்குத்தான மலையில் ஏறி வந்துள்ளீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். அடுக்கும் தான் உச்சி மலை.. அதன்பிறகே சற்றே பள்ளத்தை நோக்கி பயணிக்க வேண்டியதிருக்கும். அதாவது பெருமாள் மலையை நோக்கி பயணிக்க வேண்டியதிருக்கும். அதன்பிறகு மீண்டும ஏற்றம் ஆரம்பிக்கும் அப்படி போகும் போது, திடீரெனக் கண் இமைக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த சாலையையும் பனிமூட்டம் மறைத்துவிடும். முன்னால் செல்லும் வண்டியின் டெயில் லைட் கூடத் தெரியாது.

    Advertisement

    பெருமாள்மலை

    வழக்கமாகக் கொடைக்கானல் செல்லும் வாடகை கார் ஓட்டுநர்கள் பலரே இந்தப் பாதையில் செல்லத் தயங்குவார்கள். புதிய மற்றும் அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள் இந்தப் பாதையைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஒரு வழியாக பெருமாள் மலையை அடைந்தால், அங்கிருந்து மீண்டும் மலை சாலை மிகவும் ஏற்றமாக மாறும்.. எந்த அளவிற்கு அடுக்கத்தில் இருந்து பெருமாள் மலை வரை ஓரளவு சமமாக போகும், ஆனால் கொடைக்கானல் செல்ல அப்படியே செங்குத்தாக ஏழு கிமீ வரை ஏற வேண்டியதிருக்கும். கொடைக்கானல் செல்பவர்கள் முடிந்த வரை வத்தலக்குண்டு சாலையில் பயணிப்பது நல்லது..

    English Summary

    There is a route from Periyakulam to Kodaikanal via Kumbakkarai and Adukkam that features 13 hairpin bends. This is the most dangerous road in Tamil Nadu. A journey of just 26 km takes one to the summit of Kodaikanal, at an elevation of 2,133 meters. It is this elevation that makes the journey along the Adukkam road more perilous than the trip via the Ooty-Kalhatty road.