ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீகூர் யானைகள் வழித்தடப் பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு செயல்பட்டு வந்த தனியார் ரிசார்ட்டுகளின் நிலங்கள் செல்லாது என்றும், வணிக நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த தடையும் இனி அரசுக்கு இல்லை.. அதேநேரம் அங்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுபவர்களுக்கு மனிதாபினமான உதவிகள் அரசு செய்வதற்கு பரிசீலிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் என்பது ஊட்டி மாநகரம் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலா தலம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இங்கு ஏராளமான ரெசார்டுகள், காட்டேஜ்கள் காட்டுக்குள் இருக்கும் என்பதும் பலருக்கும் தெரியும். ஆனால் நீலகிரி மாவட்டம் என்பது முற்றிலும் மலைப்பகுதியை உள்ளடக்கிய மாவட்டம் ஆகும். பெரும்பாலான பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியுடன் கூடியவை ஆகும்.
இங்கு இந்தியாவிலேயே அதிகமான ஆசிய யானைகள் வாழ்கின்றன. குறிப்பாக சொல்வது என்றால் சீகூர் யானைகள் வழித்தடப் பகுதியில் தான் யானைகள் அதிகமாக உள்ளன. சீகூர் வழித்தடம் என்பது சுமார் 7,000 ஹெக்டேருக்கும் அதிகமானதாகும். மசினகுடி, மாவனல்லா, வாழத்தோட்டம், சொக்கநல்லி, சீகூர், அனைகட்டி, ஹுல்லத்தி, காடநாடு, மாயார் போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் தான், முதுமலை புலிகள் காப்பகம் , வயநாடு சரணாலயம், பந்திப்பூர் தேசியப் பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பிஆர் மலைப்பகுதி, ஊட்டி, குன்னூர் போன்ற பகுதிகளுக்கு திசைகளுக்கு ஒன்றாக உள்ளன. இதில் சீகூர் பகுதி மட்டும் மிகவும் சென்செட்டிவான பகுதியாகும். இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீகூர் யானைகள் வழித்தடப் பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு செயல்பட்டு வந்த தனியார் ரிசார்ட்டுகளின் நிலங்கள் செல்லாது என்றும், வணிக நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சீகூர் பகுதி ரிசார்ட் உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தல் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது தமிழக அரசு சார்பில், "அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நிலங்களைக் கையகப்படுத்தினால் அரசுக்கு ரூ.1,300 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரப்பட்டது. இதுபற்றிய வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், "சீகூர் பீடபூமி பகுதியில் எவ்வித வணிக நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது" எனத் திட்டவட்டமாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ததுடன், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேவேளையில், இந்த உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நபர்கள், மாற்று வாழ்வாதாரம் கோரித் தாக்கல் செய்யும் மனுக்களை அரசு மனிதபிமான அடிப்படையில் பரிசீலிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக மசினகுடி, பொக்கபுரம், வாழத்தோட்டம், மாவனல்லா, சிங்காரா, ஹுல்லத்தி, சொக்கநல்லி, சீகூர் மற்றும் மாயார் போன்ற பகுதிகளில் 'விவசாய நிலம்' அல்லது 'வீட்டு மனை' என்ற பெயரில் அனுமதி வாங்கிவிட்டு வணிக ரீதியிலான ரிசார்ட்டுகள் கட்டியவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு இனிமேல் ரிசார்ட் , ஹோட்டல், காட்டேஜ் போன்ற வணிக ரீதியான தங்குமிடங்கள் இயங்க முடியாது.