ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில் உறைந்து நின்ற பயணிகள்.. எட்டிப்பார்த்தால் எழுந்து வந்த வில்லன்

  • ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா சிகரத்தில், உணவுக் கடைகள் அமைந்த பகுதியில் கரடி ஒன்று உலா வந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி, ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமானோர் சுற்றுலா வந்து கொண்டிருக்கின்றனர். காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் குடும்பத்துடன் ஊட்டியில் குவிந்து வருகின்றனர். இனிவரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் உள்ளூர் வியாபாரிகளும், சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலும் புத்துயிர் பெற்றுள்ளன. இதமான காலநிலையை அனுபவித்தபடி பயணிகள் தங்களுக்குப் பிடித்த இடங்களைச் சுற்றிப் பார்த்து வருகின்றனர்.

    Advertisement

    உணவு தேடி வந்த கரடி

    இந்நிலையில், பிரசித்தி பெற்ற தொட்டபெட்டா சிகரப் பகுதியில் நேற்று மாலை நடைபாதை வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்தப் பிறகு, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று உணவு தேடி கடைகள் உள்ள பகுதிக்கு வந்துள்ளது.

    நடைபாதையில் உலா வந்த அந்தச் சுள்ளல் கரடி, நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்தது. அப்போது காட்சி முனை (View Point) பகுதியிலிருந்து வந்த சில சுற்றுலாப் பயணிகள், கரடியைக் கண்டு அதிர்ச்சியடைந்து பயத்துடன் பின்வாங்கிச் சென்றனர்.

    கூச்சலிட்டு விரட்டிய வியாபாரிகள்

    இதைக் கண்ட அங்கிருந்த நடைபாதை வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தமிட்டுக் கரடியை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

    Advertisement

    தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தொட்டபெட்டா போன்ற முக்கிய பகுதியில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பது மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

    எனவே, தொட்டபெட்டா சிகரப் பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

    English Summary

    Traders shouted and chased away a bear that had wandered onto Ooty's Doddabetta Peak in search of food.