சென்னை: ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜாவிற்கு ₹35 கோடி குதிரை பேர லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் பல திருப்பங்கள் ஏற்பட்டன.
நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்ற இந்த அனல் பறக்கும் விசாரணையில், அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களிடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர். இளங்கோ மற்றும் பி. குமரேசன் ஆகியோர், இந்த வழக்கு முழுவதும் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று வாதிட்டனர். வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதாடுகையில், "தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனுக்கு எதிராக கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ₹35 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் புகாரில், தவெக அரசை கவிழ்க்க முயன்றதாக கூறப்படும் குறிப்புகள் அனைத்தும் முற்றிலும் கற்பனை. எல்லாமே புகார் அளித்த எம்எல்ஏவின் தனிப்பட்ட கற்பனைகளே. கரூர் இடைத்தேர்தல் அரசியல் காரணங்களுக்காகவே செந்தில்பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பு கூறுவது போல இதுவரை எந்தப் பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. மனுதாரர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறார்கள்," என்றார். மற்றொரு மூத்த வழக்கறிஞர் பி. குமரேசன் வாதிடுகையில், "சட்டசபையில் திமுகவிற்கு வெறும் 59 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கையை வைத்துக்கொண்டு புதிய அரசை கவிழ்க்கவோ, அமைக்கவோ முடியாது என்பது தெரிந்தும் காவல் துறையினரே இந்த வழக்கை பெரிதாக்கி வருகின்றனர். தொலைபேசியில் நடந்த சாதாரண உரையாடலை மாற்றி சதி நடந்தது போல சித்திரிக்கிறார்கள்," என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, புகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மட்டுமே பேசுகிறது, நீங்கள் ஏன் அரசை கவிழ்ப்பது பற்றி வாதிடுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யான் நீதிமன்றத்தில் மிக அதிரடியான மற்றும் திடுக்கிடும் புதிய வாதங்களை முன்வைத்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.வி. அசோக் குமாரின் பெயர் ஏற்கனவே எஃப்ஐஆரில் இடம் பெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னையில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் அறைகளை புக் செய்து, தங்கி, தங்களின் ரகசிய சதித்திட்டங்களை தீட்டியுள்ளனர். இது புதிய அரசை அமைப்பதற்கான முயற்சி அல்ல, மாறாக தற்போதைய தவெக அரசை கலைப்பதற்கான மிகப்பெரிய சதித் திட்டம். இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு மிக முக்கியமான முதன்மைக் குற்றவாளி ஏற்கனவே தப்பி சிங்கிப்பூருக்கு ஓடிவிட்டார்," என்று நீதிமன்றத்தில் வெடிகுண்டை தூக்கிப் போட்டார். மேலும், "இது வெறும் ஒரு எம்எல்ஏவுடன் நின்ற விஷயம் அல்ல. தவெக கட்சியைச் சேர்ந்த சுமார் 10 எம்எல்ஏக்களை குதிரை பேரம் பேசி இழுக்க இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது. அதற்காக அவர்கள் அடையாளம் கண்ட 10 பேரில் இந்த ஊத்தங்கரை எம்எல்ஏவும் ஒருவர். ஒவ்வொரு எம்எல்ஏவிற்கும் தலா ₹35 கோடி வீதம் ஆசைவார்த்தை காட்டப்பட்டுள்ளது. இதில் இடைத்தரகருக்கு மட்டும் கமிஷனாக ₹5 கோடி பேசப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த சதித்திட்டத்திற்கும் பின்னணியில் கோடிக்கணக்கான ரூபாய் ஹவாலா பணம் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட இருந்தது," என்று அரசு தரப்பில் கடுமையாக வாதிடப்பட்டது. விசாரணை குழு பெங்களூரு வரை சென்று பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்துள்ளதாகவும், மற்ற எம்எல்ஏக்கள் யாரெல்லாம் இவர்களால் வலைவீசி தேடப்பட்டார்கள் என்பது குறித்த ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் அவர் கூறினார். வழக்கின் விசாரணை தற்போதுதான் மிக ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், இந்தச் சூழலில் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை முற்றிலும் பாதிக்கும். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது, என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை நிறைவு செய்தார்.மனுதாரர் செந்தில் பாலாஜி தரப்பு வாதம்
ஆட்சியை கலைக்க சதி.. சிங்கிப்பூருக்கு தப்பியோட்டம்