கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் அலைகளை போல மனித கூட்டம் நிரம்பி வழிந்தது. நள்ளிரவிலிருந்தே திரிவேணி சங்கமம் மற்றும் சூரிய உதய பாயிண்ட் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில், சூரியன் கடலுக்குள் இருந்து எழும் அந்த ஒரு காட்சியை காண மணிக்கணக்கில் காத்திருந்தனர். அந்த சூப்பரான காட்சியை தங்களது செல்போனிலும் வீடியோ எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் விடுமுறை நாட்கள் வந்தால் அதன் அழகு மட்டும் அல்ல, கூட்டமும் பல மடங்கு எகிறி விடுகிறது. அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமையும் அதே நிலைதான் கன்னியாகுமரியில் காணப்பட்டது.
காலை முதலே திரிவேணி சங்கமம், சூரிய உதய பாயிண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடற்கரை சாலைகள் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டது. நள்ளிரவிலிருந்தே பலர் குடும்பத்துடன், சிலர் நண்பர்களுடன் அந்த இடங்களில் காத்திருந்தனர். இருட்டு வானம், கடல் அலைகளின் ஓசையுடன் திரில்லிங்கான தருணத்தை சுற்றுலா பயணிகள் கழித்தனர்.. விடிகாலையில் சூரியன் மெதுவாக கடலுக்குள் இருந்து எழும் காட்சியை கண்டதுமே மொத்த பேரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.. அந்த தருணத்தில் பலர் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.. இதுகுறித்து ஒரு சுற்றுலா பயணி சொல்லும்போது, "நள்ளிரவு முதல் காத்திருந்தது சிரமமாக இருந்தது. ஆனால் சூரியன் கடலுக்குள் இருந்து எழுந்த அந்த சில நிமிடங்கள், எங்களது எல்லா சோர்வையும் மறக்க வைத்துவிட்டது" என்று ஆச்சரியத்துடன் சொன்னார்.. சூரிய உதயத்தை ரசித்த பிறகு, சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினர். அதன் பிறகு படகுத்துறையில் இருந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நோக்கி படகில் பயணம் செய்தனர். பிறகு காந்தி நினைவு மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் சிறிது நெரிசலும் ஏற்பட்டது. உள்ளூர் வியாபாரிகளுக்கும், சுற்றுலா சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கும் பெரிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. இப்படி சூரிய உதயம் மற்றும் மறைவைத் தரிசிப்பது என்பது கன்னியாகுமரியின் அடையாளமாக இருந்தாலும், இந்த முறை மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை மாவட்ட நிர்வாகத்திற்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் மாவட்ட காவல் துறை கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விடுமுறை தினம் என்பதால் மாலை நேரங்களில் சன்செட் பாயிண்டிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் உச்சத்தைத் தொடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை விடுமுறை காரணமாக கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கடற்கரை பகுதிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இனி வரும் நாட்களிலும் இதேபோல் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...!!கன்னியாகுமரி கடற்கரை
உள்ளூர் வியாபாரிகள் குஷி
காவல்துறை கட்டுப்பாடு தீவிரம்