தென் அமெரிக்கா டூ மகாபலிபுரம்.. பாம்புகளிலேயே மிக பெரிய ராட்சசன்.. வடநெம்மேலியில் வியப்பு

  • மாமல்லபுரம்: பாம்புகளிலேயே மிக பெரியதான பச்சை நிற அனகோண்டா பாம்புகள் வடநெம்மேலி முதலை பண்ணையில் முதல் முறையாக நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வடநெம்மேலி முதலை பண்ணைக்கு 3 ராட்சத பச்சை நிற அனகோண்டா பாம்புகள் தென் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 8 கிலோ எடையுள்ள ஒரு ஆண் அனகோண்டா பாம்புக்கு தமிழ்செல்வன் என்றும், 11 கிலோ எடையுள்ள மற்றொரு பெண் அனகோண்டா பாம்புக்கு லோகி என்றும், 12 கிலோ எடையுள்ள 2-வது பெண் அனகோண்டா பாம்புக்கு மெடுசா என்றும் பெயர் வைக்கப்பட்டது

    Advertisement

    இந்தியாவிலேயே மிகப்பெரிய முதலைப்பண்ணை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு பக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலி கிராமத்தில் அமைந்துள்ளது.

    Advertisement

    இந்தியாவிலுள்ள முதலை வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் நன்னீர் முதலைகள், அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர் முதலைகள், உப்பு நீர் முதலைகள், சதுப்பு நில முதலைகள், நீள வாயுடைய கரியல் ரக முதலைகள் என பல்வேறு வகை முதலைகள் இந்த பண்ணையில் உள்ள நீர் குளங்களில் பராமரிக்கப்படுகிறது. மேலும் ராட்சத ஆமைகள், மலைப்பாம்புகளும் பராமரிக்கப்படுகிறது.

    இங்கு கிழக்கு கடற்கரை சாலையையொட்டி தமிழக அரசின் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது,. இதன் ஒருபகுதியில் பாம்பு பண்ணை அமைந்துள்ளது. மேற்கண்ட சங்கத்தில் பாம்பு பிடிக்கும் உரிமம் பெற்ற 343 பேர் உட்பட 423 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், வனத்துறையினர் அனுமதிபெற்று பாம்பு பிடித்து பண்ணைக்கு கொண்டு வந்து வழங்குவார்கள். பாம்பின் வகைக்கு ஏற்ப அவர்களுக்கு கூலி வழங்கப்படுவதும் வழக்கம்

    Advertisement

    மேலும், இவ்வாறு பிடித்து வரப்படும் பாம்புகளில் இருந்து விஷம் எடுக்கப்பட்டு மருத்துவ தேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும். பாம்பு பண்ணையில், விஷம் எடுப்பதை பார்க்க சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. பண்ணைக்கு கொண்டு வரப்படும் கண்ணாடி விரியன், நல்லபாம்பு, கட்டுவிரியன், சுருட்டை விரியன் ஆகிய 4 விஷ பாம்புகள் முறையாக பராமரிக்கப்படுகிறது. அவற்றின் விஷம் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. சில தினங்களுக்கு பிறகு அவை அடர்ந்த வனப்பகுதிகளில் விடுவிக்கப்படுவதும் வழக்கம் ஆகும்.

    இந்த நிலையில் இங்கு பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக தென் அமெரிக்காவில் இருந்து 12 அடி நீளமுள்ள 3 ராட்சத பச்சை நிற அனகோண்டா பாம்புகள் வரவழைக்கப்பட்டிருக்கிறது. இந்த பச்சை நிற அனகோண்டாக்கள் பூமியிலேயே வாழும் மிகவும் கனமான பாம்புகளாகும். இவை 20 அடிக்கும் அதிகமான நீளத்தையும், 550 பவுண்டுகளுக்கும் அதிகமான எடையையும் கொண்டவை ஆகும்.

    Advertisement

    முட்டையிடும் நல்லபாம்பு, கட்டுவிரியன் போன்ற பெரும்பாலான பாம்புகளை போல் இல்லாமல், அனகோண்டாக்கள் குட்டிகளை ஈனும் வகையை சேர்ந்தது. சுமார் 6 முதல் 9 மாத கர்ப்ப காலத்துக்கு பிறகு, ஒரு பெண் அனகோண்டா பாம்பு 14 முதல் 80 வரையிலான குட்டிகளை போடும் இந்த குட்டிகள் தண்ணீரில் உடனடியாக நீந்தவும், வேட்டையாடவும் தயாராகும்.

    பாம்புகளிலேயே மிக பெரியதான பச்சை நிற அனகோண்டா பாம்புகள் வடநெம்மேலி முதலை பண்ணையில் முதல் முறையாக நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 8 கிலோ எடையுள்ள ஒரு ஆண் அனகோண்டா பாம்புக்கு தமிழ்செல்வன் என்றும், 11 கிலோ எடையுள்ள மற்றொரு பெண் அனகோண்டா பாம்புக்கு லோகி என்றும், 12 கிலோ எடையுள்ள 2-வது பெண் அனகோண்டா பாம்புக்கு மெடுசா என்றும் பெயர் வைக்கப்பட்டது. இந்த 3 அனகோண்டா பாம்புகளும் சுமார் 12 அடி நீளமாகும். நேற்று சுற்றுலா வந்த பொதுமக்கள் பலர் அனகோண்டா பாம்பை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து சென்றார்கள்.

    English Summary

    Green anacondas—the largest of all snake species—have been put on display for the first time in a water-filled glass enclosure at the Vadanemmeli Crocodile Farm. To this end, three giant green anacondas were brought to the Vadanemmeli Crocodile Farm from South America.