திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக இசக்கி சுப்பையா என ஜெபக்கூட்டத்தில் அறிவித்து அவர் வெற்றிக்காக ஜெபம் செய்திருக்கிறார் மதபோதகர் மோகன் சி. லாசரஸ். தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தவெக தலைமையே இன்னும் சொல்லாத நிலையில், இவர்தான் வேட்பாளர் என மதபோதகர் அறிவித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. குறிப்பாக திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டதாக கூறி எம்எல்ஏக்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர்.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் சுமார் 25 எம்எல்ஏக்கள்.. அதற்குப் பிறகு அவர்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எடப்பாடி திட்டமிட்ட நிலையில் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு கட்சியில் மீண்டும் சேர்வதாக அறிவித்தனர்.
இதற்கிடையே தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு சத்தியபாமா, சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். தாராபுரம் மதுராந்தகத்திலும் மாஜி அதிமுக எம்எல்ஏக்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இசக்கி சுப்பையாவும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருக்கும் நிலையில் இடைத்தேர்தலில் அவரே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இசக்கி சுப்பையா தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடுவார் எனவும், அவருக்கு வாக்களிக்க வேண்டுமென பிரபல மதபோதகர் மோகன் சி லாசரஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமையில் ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளரும், தென்காசி மாவட்டப் பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் விபின் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஜெபம் செய்த மோகன் சி. லாசரஸ், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாகவும், அதில் இசக்கி சுப்பையா வேட்பாளராகப் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டு அவருக்காகப் பிரார்த்தனை செய்தார். இசக்கி சுப்பையாவும் அவரது தந்தையும் நல்ல மனம் கொண்டவர்கள், பல்வேறு நற்பணிகளைச் செய்தவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், இசக்கி சுப்பையாவுக்கு இறைவன் நல்ல உடல்நலத்தையும், ஆசீர்வாதத்தையும் வழங்க வேண்டும் என்றும், அம்பாசமுத்திரம் தொகுதி மக்களுக்கு நன்மைகள் செய்ய அவரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரார்த்தித்தார். மேலும், அரசியலில் அவரை உயர்த்தி நல்ல பதவிகளை வழங்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என அரசியல் கட்சியினர் எதிர்பார்த்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அத்தொகுதியில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் ஏற்கனவே சுவர் விளம்பரங்களில் இசக்கி சுப்பையாவின் பெயரும், விசில் சின்னமும் அதிக அளவில் இடம்பெற்று வரும் நிலையில், தற்போது மத போதகர் மோகன் சி. லாசரஸ் ஜெபக்கூட்டத்தில் இசக்கி சுப்பையாவை தவெக வேட்பாளராகக் குறிப்பிட்டு பிரார்த்தனை செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.இசக்கி சுப்பையா
மோகன் சி லாசரஸ்
ஜெபக்கூட்டம்
அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்! நாதக சீமான் பொது வேட்பாளரா? திண்டுக்கல் சீனிவாசன் பதிலை பாருங்க!
சீமான்
விசில் சின்னம்