நெல்லையில் பயங்கரம்.. பட்டப்பகலில் தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை! தலையை சாலையில் வீசிய கொடூரம்

  • நெல்லை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பட்டப்பகலில் இரட்டை கொலை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் வருவதை போல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களை காரால் இடித்து கீழே தள்ளி பின்னர், அரிவாளால் சரமாரியாக வெட்டி தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கொலை செய்துவிட்டு தலையை அப்பகுதியில் அப்படியே வீசி விட்டு சென்றுள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துண்டிக்கப்பட்ட தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    தலையை நடுரோட்டில் வீசிய கொடூரம்

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 45). இவர் இன்று தனது மூத்த மகன் சின்னதுரை மற்றும் 5 வயது இளைய மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். சேரன்மகாதேவி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது பின்னால் வந்த கார் ஒன்று இடித்து தள்ளியுள்ளது. இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்து காளிமுத்து மற்றும் அவரது மகன் படுகாயமடைந்துள்ளனர்.

    அப்போது காரில் இருந்து இறங்கிய கும்பல், காளிமுத்துவை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். பின்னர் தலையை நெல்லை - கல்லிடைக்குறிச்சி சாலையில் தூக்கி எறிந்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அவரது 5 வயது மகனையும் வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது.

    Advertisement

    10 ஆண்டுகளுக்கு பின்..

    இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். படுகாயத்துடன் கடந்த சின்னதுரையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நெல்லை எஸ்பி நேரில் ஆய்வு செய்தார். தடயவியல் நிபுணர்களும் வந்து அங்குள்ள ஆதாரங்களை கைப்பற்றி சென்றனர். உயிரிழந்த இருவரது உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளது தெரியந்ததாக கூறப்படுகிறது.

    அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்பு மூலச்சி பகுதியில் சாதி ரீதியிலான பிரச்சினையில் பெருமாள் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்கு பழியாகவே இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    English Summary

    Nellai double murder: A father and his five-year-old son were brutally killed in broad daylight at Kallidaikurichi in Tirunelveli district. The assailants allegedly rammed their two-wheeler with a car, causing them to fall, before attacking them with sickles and beheading them. Police have launched an investigation.