அய்யோ டாஸ்மாக் கடைகளை பூட்டிட்டு போராட்டம் பண்றாங்களே! தவிக்கும் மதுப்பிரியர்கள்!

  • திருநெல்வேலி: காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள், கடைகளை திறக்காததால் மது பிரியர்கள் தவித்து போனார்கள்.

    Advertisement

    தனியார் மதுபான விடுதிகள், மனமகிழ் மன்றங்களில் மதுப் பிரியர்கள் குவிந்து வருவதால் அங்கும் தற்காலிகமாக விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை எவ்விதத்திலும் ஈடுபடுத்தக் கூடாது என வலியுறுத்தி மதுபானக் கடைகளை பூட்டி சாவிகளை நெல்லை டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    Advertisement

    இதனால் தனியார் மதுபானக் கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களில் மதுப் பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர். நெல்லை டவுன் கண்ணன் சாலையில் உள்ள மனமகிழ் மன்றத்தில் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகரித்ததால் தற்காலிகமாக மதுபான விற்பனை நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து மதுபானம் வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்து வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்தால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.

    English Summary

    Tasmac employees in Tirunelveli kept closed as they involve in protest for opposing bottle return policy.