திருநெல்வேலி: பள்ளியில் நடந்த காலாண்டு தேர்வில் தோல்வியடைந்ததால் பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு 15 வயது சிறுமி வெளியேறி உள்ளார். அவருக்கு நடந்த சம்பவம் எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது ஒன்று.. ஒரு பள்ளி மாணவியை மூன்று நாட்கள் 16 வயது முதல் 18 வயதுடைய கயவர்கள் மற்றும் பெரியவர்கள் என ஆள் ஆளுக்கு இழுத்துட்டுப் போய் சீரழித்துள்ளார்கள். இத்தனையும் ரயில், பேருந்து நிலையம், திருவிழா என்று பொது இடங்களை கடந்தே நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் இரண்டு இளைஞர்கள் மற்றும் 2 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, காலாண்டு தேர்வில் தோல்வியடைந்தது தொடர்பாக பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சிறுமி வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் தாழையூத்து காவல் நிலையத்தில் காணாமல்போனதாகப் புகார் கொடுத்தனர்.
ஆனால், 15 வயதாகும் அந்த சிறுமி தனது காதலன் மற்றும் மற்றொரு நண்பருடன் ரயிலில் திருச்செந்தூருக்குச் சென்றுள்ளார். பயணத்தின்போது அந்தச் சிறுவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தங்களைத் தேடி காவல்துறையினர் வருவதைப் பெற்றோர் மூலம் அறிந்த அவர்கள், சிறுமியிடம் பணம் கொடுத்துவிட்டு அவரைக் கைவிட்டுச் சென்றதாகப் போலீசார் தெரிவித்தனர். திருச்செந்தூரில் தனியாக இருந்த சிறுமியிடம் மதுரையைச் சேர்ந்த கார்த்திக், சண்முகசுந்தரம், மணி ஆகிய மூன்று பேர் உதவி செய்வதாகக் கூறி பேசியிருக்கிறார்கள். பின்னர், தசரா திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த குலசேகரப்பட்டினத்துக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு 28 வயதான மணி என்பவர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், மணி சண்முகசுந்தரத்துடன் அங்கிருந்து சென்றுள்ளார். இவர்கள் திருவிழாவுக்குத் திருடுவதற்காக வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, விவாகரத்தான 26 வயது கார்த்திக், சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அக்டோபர் 16-ம் தேதி தனது வடமதுரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தாராம் கார்த்திக். பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த சிலரின் உதவியுடன் சிறுமி அங்கிருந்து தப்பித்து, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தார். சிறுமியைத் தேடி வந்த திருநெல்வேலி காவல்துறையினர், அக்டோபர் 17-ம் தேதி அவரை மீட்டனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறுமி மற்றும் அவருடன் தொடர்புடைய மூன்று ஆண்கள் இருந்த இடத்தைக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். மணி மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். கார்த்திக் திண்டுக்கல் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு சிறுவர்களும் சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கண்காணிப்பு இல்லத்தில் தங்கவைக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.செஞ்சி சிறுமி எங்கே? 10-வது நாளாக தேடும் போலீசார்.. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு