கோவை, நீலகிரி பக்கம் போகாதீங்க.. சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்!

  • சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கோயம்புத்தூர், நீலகிரி உட்பட 6 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், "கோவை, நீலகிரி, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் மதியம் 1 மணி வரை இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    முன்னதாக நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கனமழை பெய்திருந்தது. இதன் காரணமாக வெள்ளி அருவி உட்பட கொடைக்கானலில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. சுற்றுலாவுக்கு வந்தவர்கள் வெள்ளி அருவியை தாண்டி மேலே போக முடியாமலும், சுற்றுலா முடித்து திரும்பியவர்கள் அருவியை தாண்டி கீழே இறங்க முடியாமலும் பாதி வழியில் நின்றனர். மண் சரிவு, பாறை உருண்டது, மின் கம்பங்கள் சரிவு என மொத்த கொடைக்கானலும் கொலப்ஸாகியிருக்கிறது.

    எனவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் விடுத்திருந்த அறிவிப்பில், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆங்காங்கே மண் சரிவு, மரங்கள் சாய்ந்து விழுதல் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

    Advertisement

    மேலும், கொடைக்கானலிலிருந்து அடுக்கம் வழியாகப் பெரியகுளம் செல்லும் மலைப்பாதை உள்ளிட்ட சில சாலைகளில் கனமழையின் காரணமாக மண் சரிவு மற்றும் மழைநீர் அரிப்பினால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், மலைப்பாதைகளில் வாகனப் போக்குவரத்திற்கும். பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

    தற்போதைய வானிலை நிலவரத்தின்படி, வரும் நாட்களிலும் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் தங்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி ஆகிய மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா வருவதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், மலைப்பாதைகளில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மழையின் காரணமாக சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுதல், மண் சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    Advertisement

    எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தற்போதைய கனமழைச் சூழலில் கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி பகுதிகளுக்குச் சுற்றுலா வருவதைத் தவிர்த்து, காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Avoid Coimbatore and Nilgiris: The intensity of rainfall has increased in the interior districts of Tamil Nadu. In light of this, a 'yellow alert' has been issued for six districts, including Coimbatore and Nilgiris, for the next two hours.