சென்னையில் ஒரு நாள் இரவு பெய்த மழைக்கே வேளச்சேரிக்கு வந்த 20 பாய்மர படகுகள்! மக்கள் வேதனை

  • சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையால் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதியில் தண்ணீர் தேங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாய்மர படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த 5 நாட்களில் சென்னையில் கிட்டதட்ட 40 முதல் 45 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    Advertisement

    இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மழை நீர் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் தாழ்வான பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் அவற்றை வடிப்பதற்கு சற்று காலதாமதம் ஆகிறது.

    இடி, மின்னலுடன் மழை

    அந்த வகையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை சென்னை, புறநகர் பகுதிகளில் இடி , மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், வரதராஜபுரம், மடிப்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி

    அதிலும் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதியில் கார்களின் டயர்களில் கால்வாசி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அந்த மழைநீரில் தத்தளித்தபடியே பணிக்காகவும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகவும் பயணிக்க வேண்டியுள்ளது.

    Advertisement

    கொசுத் தொல்லை

    இது போல் தண்ணீர் தேங்கியிருந்தால் அதில் கொசுக்கள் முட்டையிட்டு கொசுத் தொல்லையும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் இது போல் தண்ணீர் தேங்குவது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    நோய்த் தொற்று பரவும் அபாயம்

    மேலும் சுகாதாரமற்ற நிலையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரால் நோய்த் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். மேலும் வருடா வருடம் மழை பெய்தாலே வெள்ள நீரில் வேளச்சேரி தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்கள். இந்த நீரில் செல்லும் இரு சக்கரவாகனங்களும் திடீரென பழுதாகி நின்றுவிடுவதால் மழைநீரில் இறங்கி அதை தள்ளிக் கொண்டு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    பாய்மரப் படகுகள்

    இந்த நிலையில் வெள்ள நீரில் இருந்து பொதுமக்களை மீட்பதற்காக வேளச்சேரி ஏஜிஎஸ் காலனிக்கு 20 பாய்மரப் படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. எனினும் தற்போதைக்கு ஏஜிஎஸ் காலனியில் நிலைமை சீரானதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சடைந்தனர்.

    புயல் வந்தால்

    40 செ.மீ. மழைக்கே இத்தனை பாதிப்புகள் என்றால் இன்னும் காற்றழுத்தம், புயல் வந்தால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுமோ என்ற அச்சத்துடன் வேளச்சேரிவாசிகள் பொழுதை கடத்தி வருகிறார்கள்.

    வேளச்சேரியில் மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்குவதற்கு காரணம் தாழ்வான நிலப்பரப்பை கொண்டுள்ளதால்தான் என்கிறார்கள்.

    வேளச்சேரியில் மட்டும் ஏன் மழைநீர் தேங்குகிறது?

    மேலும் பரந்து விரிந்த நீர்நிலைகள், நகர்ப்புறமயமாக்கல் மற்றும் கட்டுமானங்களின் பெருக்கத்தால் சுருங்கிவிட்டன. இதனால் மழைநீரை தாங்கும் திறன் குறைந்துவிட்டது. வேளச்சேரி கோவலம் வடிநிலப் பகுதிக்குள் வருவதால் அந்த பகுதியில் உள்ள நீர்வரத்துக் கால்வாய்கள், ஒக்கியம் மடுவு போன்ற பாதைகளில் மழை நீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

    Advertisement

    நீர் நிலைகளில் அட்டூழியம்

    பல்வேறு நீர் நிலைகள், மழைநீர் வடிகால்களில் மக்கள் குப்பைகளை கொட்டுதல், வீடு கட்டும் கழிவு, பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால் கால்வாய்கள் தூர்ந்து போனதன் விளைவும் மழைநீர் தேங்க காரணம் என சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் பொதுமக்களை இன்னலுக்குள்ளாமல் பாதுகாப்பது அரசின் கடமை என்பதால் வேளச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். அடுத்த மழைக்காவது அந்த மக்கள் அல்லல் படாமல் நிம்மதியாக அந்த குடியிருப்பில் வசிக்க வேண்டுமே தவிர, நண்பர்கள், உறவினர்களின் வீடுகள், நிவாரண முகாம்களில் தங்கும் நிலை ஏற்படக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

    English Summary

    Heavy rain in Chennai leaves Velachery AGS colony to deal the situation using boats. There are 20 boats are deployed.