இன்னைக்கும் மழை இருக்கு! இடி, மின்னலுடன் விட்டு விளாசும்! வெயிலுக்கு நடுவே வானிலை மையம் ஜில் அப்டேட்

  • சென்னை: தமிழகத்தில் நேற்று தஞ்சை, திருவாரூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டிய நிலையில் இன்றும் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை மற்றும் பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனினும் மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகவே பரவலாக கனமழை கொட்டி வருகிறது. நேற்று தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டியது. நெல்லையிலும் நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    Advertisement

    வளிமண்டல சுழற்சி

    இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

    Advertisement

    3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு சான்ஸ்

    இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 9, 10 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 11 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் இன்று (06-09-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    While heavy rains lashed districts including Thanjavur, Tiruvarur, Madurai, and Virudhunagar yesterday, the Meteorological Department has stated that there is a possibility of rain in three districts today as well. Regarding Chennai, the department has forecast a chance of moderate rain this evening or at night.