சென்னை: சென்னையில், குறிப்பாக வடசென்னையில் நேற்றிரவு குறுகிய நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மழை தீவிரமாக பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உதவி மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று இரவு சென்னை பெருநகர மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சென்னையில் கடந்த சில மணி நேரங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக மாலை தொடங்கி, அதிகாலை 2 மணி வரை மட்டும் சில இடங்களில் 35.8 செ.மீ வரை மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் ஒட்டுமொத்த அளவான 69 செ.மீ ஆக இருக்கும் நிலையில்,, ஒரே நாளில் சரிபாதி அளவுக்கு மழை பெய்திருப்பது இது சாதாரண மழையல்ல என்பதை காட்டுகிறது. சென்னை மாநகராட்சியின் மத்திய கட்டுப்பாட்டு அறையில் அனைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், 15,000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களும் 24 மணி நேரமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். மக்கள் எந்த விதத்திலும் பதற்றப்பட வேண்டாம். வீடுகளில் தண்ணீர் புகுந்தாலோ அல்லது வேறு எந்த அவசர உதவி தேவைப்பட்டாலோ உடனடியாக 1913 என்ற இலவச உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் புகார்களை தெரிவித்தவுடன் அந்தந்த மண்டலங்களில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலமாக உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது தாம்பரம் மற்றும் வடசென்னையின் பல இடங்களில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கூட பாதிப்பு மோசமாகவே இருக்கிறது. இதனால் தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவினர் 30 பேர்கொண்ட 6 படகுகளுடன் மீட்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காக, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேநேரம் பழைய வீடுகளில் வசிக்கும் மக்கள், குறிப்பாக 60 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை நாங்களே செய்யத் தொடங்கியுள்ளோம். சென்னை முழுவதும் தற்போது 6 இடங்கள் உடனடியாக உணவு தயாரிப்பு மையங்களாக மாற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு மணி நேரமும் நிலவரத்தை கேட்டறிந்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளார். காலை 8 மணி அல்லது 9 மணிக்குப் பிறகு நிலைமை சீரடையும் என எதிர்பார்க்கிறோம். தொண்டு நிறுவனங்களும், மக்களும் அரசாங்கத்தோடு ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்தச் சவாலை நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
பதற வேண்டாம்
Chennai rains: சென்னையில் மேக வெடிப்பு? விடிய விடிய கொட்டிய அதிதீவிர கனமழை.. வானிலை மையம் முக்கிய விளக்கம்
பழைய வீடுகள்
2023ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் கொட்டி தீர்த்த பெரிய மழை! என்ன நடந்தது நேற்று? வெதர்மேன் விளக்கம்
மாநகராட்சி ஏற்பாடுகள்