சென்னை: இன்று மாலை தொடங்கி இரவு வரை சென்னையில் பரவலாக மழை பெய்திருக்கும் நிலையில், இரவு முழுவதும் சென்னை தொடங்கி டெல்டா மாவட்டங்கள் வரை மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில், "சென்னையை சூழ்ந்திருந்த மழை மேகங்கள் தற்போது கடலை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றன. சென்னையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது, இன்றுதான் மிகச்சிறந்த மழை பதிவாகியிருக்கிறது.
வட தமிழகத்தை பொறுத்தவரை, தேவையான அளவுக்கு மழை பெய்து வருகிறது. அடுத்த சில மணி நேரங்களுக்கு டெல்டா, கடலூர் மற்றும் புதுச்சேரி ரெடியாக இருக்க வேண்டும். இன்றிரவு பலத்த மழை பெய்யும். குறிப்பாக இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வட தமிழகத்திற்கு இந்த மழை தேவைதான். அந்த வகையில் இந்த நாள் சிறப்பான நாளாகும். முன்னதாக தெற்கே, மதுரை-சிவகங்கை பெல்டில் நல்ல மழை பெய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது" என்று கூறியிருக்கிறார். வெதர்மேன் கணிப்பை நிஜமாக்கும் வகையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு பல மாவட்டங்களில் மழை கொட்டப்போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.