சென்னை: சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் மாலை நேரங்களில் லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை மக்களே அடுத்த 6 முதல் 7 நாட்களுக்கு மாலை வேளைகளில் வெளியே சென்றால் குடையோ ரெயின் கோட்டோ இல்லாமல் செல்ல வேண்டாம்.
சென்னையில் காலை நேரங்களில் மழை இருக்காது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இன்று சில பகுதிகளில் கனமழை பெய்யும். அதன் பக்கத்தில் இருக்கும் பகுதிகளில் மழையே இருக்காது. அதற்காக கவலை வேண்டாம். மழை பெய்யாத பகுதிகளில் அடுத்த நாள் பெய்யும். மாலை 4 மணிக்கு மேல் வெளியே சென்றால் கையில் குடை அல்லது ரெயின் கோட் தேவை. ஒரு சில இடங்களில் திடீரென மழை பெய்துவிடும். ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும். எனவே கவனக்குறைவாக குடையில்லாமல் சென்றுவிடாதீர்கள். ஒரு நாள் முழுக்க மழை பெய்யாது. மாலை நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழையை சென்னையின் பல்வேறு இடங்களில் தினமும் ஆகஸ்ட் 2 முதல் 8ஆம் தேதி வரை பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது, புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4° செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. 02-08-2026 மற்றும் 03-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும். 04-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 05-08-2026 முதல் 07-08-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்: 01-08-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2° செல்சியஸ் வரை குறையக்கூடும். 02-08-2026 முதல் 05-08-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 01-08-2026 முதல் 03-08-2026: அதிகபட்ச வெப்பநிலை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். 04-08-2026 மற்றும் 05-08-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று (01-08-2026) மற்றும் நாளை (02-08-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: 01-08-2026 மற்றும் 02-08-2026: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே வீசக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.