அடித்து வெளுக்கும் மழை.. கோவை கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடல்

  • கோவை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை, நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. மழை காரணமாக கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் உள்ள சுற்றுலா மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைவர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையத்தால் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்
    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது.

    Advertisement

    ஆரஞ்ச் அலர்ட் மாவட்டங்கள்

    இது புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அர்னாப் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதனிடையே கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி திண்டுக்கல், மதுரை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களுக்கு, சென்னை வானிலை ஆய்வு மையம் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் விட்டுள்ளது. வருகிற திங்கள் கிழமை வரை இந்தப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தப் பகுதிகளில் நிவாரண பணி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    Advertisement

    சுற்றுலா பயணிகளுக்கு தடை

    நீலகிரி, கொடைக்கானல் மலைப் பிரதேசங்கள் கனமழையால் முடங்கியுள்ளது. நிலசரிவு, வெள்ளம் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஆறாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக, ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை தற்காலிகமாக மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா தலங்களை மூட உத்தரவிட்டுள்ளனர். கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றால சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது.

    Advertisement

    பள்ளிகளுக்கும் விடுமுறை

    பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம் மூடப்பட்டிருக்கும் என்று வனத்துறை கூறியுள்ளது. மேலும் வால்பாறை, டாப்ஸ்லிப் போன்ற மலைப் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களும் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. மழை காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    English Summary

    Orange alert Coimbatore Kaniyakumari Tourist places temporarily closed due to heavy rain.