கோவையை புரட்டிப் போட்ட மழை.. 15 செ.மீ கொட்டியதால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை

  • கோவை: தமிழ்நாட்டில் வடகிழக்கு தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று கனமழை கொட்டியது. சமவெளி, மலைப் பகுதி, நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவையின் பல பகுதிகளில் 5 முதல் 15 செ.மீக்கு கனமழை கொட்டியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. நேற்று மதியம் தொடங்கி இரவு வரை விடிய விடிய மழை கொட்டியது. மாநகரின் பல்வேறு இடங்களில் இடியுடன், கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். மழைநீருடன், கழிவு நீரும் கலந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.

    Advertisement

    கோவை மழை

    வடகிழக்கு பருவமழைக்காக மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் பயனில்லை. பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து வெள்ளம் போல சூழ்ந்தது. அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனனை வளாகக்திலும் மழை நீர் புகுந்தது.

    ஆத்துப்பாலம், சுங்கம், வெள்ளலூர், சவுரிபாளையம், வின்சென்ட் நகர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். போத்தனூர் பிரதான சாலை,பேரூர் சாலை, அவிநாசி பாலம் கீழ் பகுதி என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். நஞ்சுண்டாபுரம் சாலை ஐஓபி வங்கி அருகே உள்ள அபார்ட்மென்ட் பார்க்கிங்கில் குளம் போல நீர் புகுந்தது.

    Advertisement

    பேயாட்டம் ஆடிய மழை

    லங்கா கார்னர், கிக்கானி பள்ளி மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. செல்வபுரம் செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து அதிகளவு நீர் வெளியேறியதால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நீர் புகுந்தது. முழங்கால் அளவுக்கு வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் அமைச்சர் சம்பத்குமார், மேயர் ரங்கநாயகி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    வால்பாறை 13, 14வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் குறுக்கே பெரிய பாறை விழுந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் 15 செ.மீ, மதுக்கரை தாலுகாவில் 13 செ.மீ, போத்தனூரில் 11 செ.மீ, கோவை தெற்கு தாலுகாவில் 10 செ.மீ, வேளாண் பல்கலைக்கழகத்தில் 8 செ.மீ, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூரில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதேபோல பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியுள்ளது. கொட்டி தீர்த்த மழையால் கோவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Heavy rainfall of up to 15 cm inundated several parts of Coimbatore, flooding residential areas, bus stands and hospital premises while disrupting traffic and normal life.