சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் தற்போது, சென்னையிலிருந்து சுமார் 1,250 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டிருக்கிறது என்றும், ஆனால் தற்போது தமிழகத்தில் பெய்யும் மழைக்கு இது காரணமில்லை எனவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "மத்திய கிழக்கு வங்ககடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இத்தாழ்வு மண்டலம் இன்றிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை புயலாக மாறக்கூடும்.
சென்னை யிலிருந்து 1250 கிமீ தூரத்தில் வடக்கே-வடகிழக்கே காற்றழத்த தாழ்வு மண்டலம் மையம். இப்புயல் சின்னத்தால் தற்போது தமிழநாட்டில் மழை இல்லை. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரளம் கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தமிழக நிலப்பரப்பு மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் நிலவுகிறது. தமிழக நிலப்பகுதியில் நீடிக்கும் தாழ்வு பகுதியே மழைக்கு தமிழ்நாட்டில் பெய்து வரும் மழைக்கு காரணம். நாளை காலை வரை தமிழ்நாட்டில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு. வடகடலோர மாவட்டங்கள், வடக்கு உள் மாவட்டங்கள் & காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை வாய்ப்பு. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் இன்று அதித கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்திருக்கிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல், நீலகிரியின் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்திருக்கிறது. கனமழை காரணமாக, கொடைக்கானலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. எனவே நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஊட்டியில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அதேபோல கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக, கோதை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மறு அறிவிப்பு வரும் வரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம் என்னவெனில் சமவெளி பகுதியிலும் கனமழை பெய்திருக்கிறது என்பதுதான். குறிப்பாக ராணிப்பேட்டை, கடலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று நள்ளிரவு முதல் இடைவிடாமல் வெளுத்து வாங்கிய கனமழையின் காரணமாக.. ராணிப்பேட்டை 56.6 மில்லி மீட்டர், பாலார் அணைக்கட்டு 49.8 மில்லி மீட்டர், வாலாஜா 92.4 மில்லி மீட்டர், அம்மூர் 66 மில்லி மீட்டர், ஆற்காடு 59.4 மில்லி மீட்டரும், அரக்கோணம் 23.8 மில்லி மீட்டர், மின்னல் 24.6 மில்லி மீட்டர், காவேரிப்பாக்கம் 40.6 மில்லி மீட்டர், பனப்பாக்கம் 24.2 மில்லி மீட்டர் சோளிங்கர் 22.4 மில்லி மீட்டர், கலவை 71.4 மில்லி மீட்டர் என மொத்த மாவட்டத்தின் மழையின் பதிவு 531.2 மில்லி மீட்டர் பதிவானதாக மாவட்ட நிர்வாகத்தை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக வாலாஜாபேட்டையில் '92.4' மில்லி மீட்டரும் குறைந்தபட்சமாக சோளிங்கர் பகுதியில் '22.4' மில்லி மீட்டர் மழை பதிவானது.மழைக்கு காரணம்
கனமழைக்கு வாய்ப்பு
கொட்டி தீர்த்த கனமழை
சமவெளி பகுதிகளிலும் நல்ல மழை
கொடைக்கானலில் கொட்டும் மழை! சப்தமுடன் ஆர்ப்பரிக்கும் அருவி! சாலைகளில் வெள்ளநீரால் மக்கள் அவதி
ராணிப்பேட்டையில் கனமழை