வங்கக்கடலில் வெள்ளை பூதம்..அர்னாப் புயலால் அலர்ட்! துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

  • நாகை: ​வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து 'அர்னாப்' புயலாக உருவெடுத்துள்ளதை அடுத்து, நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் தொலைதூர புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு நோக்கி மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று அதிகாலை 05:30 மணியளவில் 'அர்னாப்' புயலாக வலுப்பெற்றது.

    Advertisement

    ​இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவுக்குள் தீவிரப் புயலாகவும் அக்டோபர் 27-ஆம் தேதிக்குள் மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெறும் என வானிலை மையம் கணித்துள்ளது.

    தொடர்ந்து நகர்ந்து அக்டோபர் 28 முற்பகலில், ஆந்திராவின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 140 கி.மீ வேகத்திலும் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் உருவானதைத் தொடர்ந்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் ஏற்கனவே ஏற்றப்பட்டிருந்த 1-ஆம் எண் கூண்டு இறக்கப்பட்டு, தற்போது 2-ஆம் எண் தொலைதூர புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    ​புயல் தொலைதூரத்தில் உருவாகியுள்ளதால் துறைமுகத்தை விட்டுச் செல்லும் கப்பல்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த 2-ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதால் கடலோரப் பகுதி மக்களும், மீனவர்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாகையில், கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டுப் பெரும் சேதமடைந்துள்ளன. ​குறிப்பாக, சில்லாடி கடற்கரை நோக்கிச் செல்லும் முக்கிய சாலையில் மழையின் தீவிரத்தால் திடீரென ராட்சத பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Advertisement
    வங்கக்கடலில் சம்பவம்.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! 3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை

    அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், காவல்துறையினர் சார்பில் உடனடியாக அப்பகுதியில் தடுப்புப் பலகைகள் அமைக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ​மேலும், வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், அந்த வழியாகப் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செல்லுமாறும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ​இதேபோன்று மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கியுள்ளதால், பல்வேறு முக்கிய சாலைகளிலும் அடுத்தடுத்துப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ​பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு, பழுதடைந்த சாலைகளையும் ஆபத்தான பள்ளங்களையும் போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English Summary

    Cyclone Arnab intensifies over the Bay of Bengal, prompting No. 2 warning signals at Nagapattinam and Karaikal ports as heavy rain damages roads.