மழை ஆட்டம் ஓவர்.. ஆந்திரா பக்கம் போன அர்னாப் புயல்! அதிதீவிர புயலால் தமிழ்நாட்டுக்கு பிரயோஜனமில்லை!

  • சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அர்னாப் புயல் மேற்கு வட மேற்கு திசையில் அதிதீவிர புயலாக நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை ஆந்திரா மற்றும் ஏனாம் இடையே மிகத் தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் எனவும். எச்சரித்துள்ளது. அதே நேரத்தில் இந்த புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும், ஓரிரு இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," நேற்று (26-10-26) மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் (அர்னாப்) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, 1730 மணி அளவில் தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

    Advertisement

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, 2330 மணி அளவில் மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (27-10-26) காலை 0830 மணி அளவில் மிக தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

    இது இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகர அதிக வாய்ப்புள்ளது. அதன் பிறகு, இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (28-10-26) ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் (Yanam) கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா (Bapatla) மற்றும் விசாகப்பட்டினம் (Visakhapatnam) இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும்.

    Advertisement

    சுமார் 3.1 கிமீ உயரம் வரை இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலிருந்து, 'அர்னாப்' (Arnab) மிக தீவிர புயலின் மையம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

    இதனால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    Advertisement

    நாளையும் நாளை மறுநாளும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." எனக் கூறியுள்ளது.

    English Summary

    IMD forecasts Cyclone Arnab’s landfall near Yanam on October 28, with light to moderate rain expected in parts of southern Tamil Nadu and Western Ghats districts.