நகர மறுக்கும் ஒர்னாப் புயல்.. அதிகாலையே கடக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் 3 மணி நேரம் லேட்!

  • சென்னை: நள்ளிரவு 1.20 மணியளவில் ஒர்னாப் (Arnab) புயலின் மைய பகுதி கரையை கடக்க தொடங்கிய நிலையில், அதிகாலை 4 மணியளவில் முழுவதுமாக மையப்பகுதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் கரையை கடக்கும் போது நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டதன் காரணமாக மேலும், 3 மணி நேரம் வரை கரையை கடக்க அர்னாப் புயல் எடுத்துக்கொள்ள கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

    Advertisement

    வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த அர்னாப் புயல், மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வந்தது. நள்ளிரவு 12.30 மணியளவில் புயலின் மையப் பகுதி கரையை கடக்க துவங்கியது. அதிகாலை 4 மணியளவில் முழுவதுமாக மைய பகுதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    Advertisement

    புயல் கரையை கடக்கும் போது நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. மேலும் 3 மணி நேரம் வரை கரையை கடக்க அர்னாப் புயல் எடுத்துக்கொள்ள கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. பபத்லா, - விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே மிகத் தீவிரப் புயலாக, புயல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது.

    ஆந்திராவில் மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா இடையேயான விமான சேவை, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    Advertisement

    புயல் காரணமாக காக்கிநாடா மாவட்டத்தில் உப்படா, கோனபாபேட்டா மற்றும் முலாபேட்டா கடற்கரை கிராமங்களில் கடல்நீர் குடியிருப்புக்குள் புகுந்தது. தொடர்ந்து ஆக்ரோஷமாக எழுந்த ராட்சத அலைகளால் கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் மற்றும் நாட்டு படகுகள் சேதமடைந்தன. 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

    புயல் நிலவரம் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வதந்திகளையோ, உண்மைக்கு மாறான கணிப்புகளையோ வெளியிடக் கூடாது என ஒடிசா அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ​கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் களமிறக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    புதன்கிழமை நண்பகலுக்குள் புயல் முழுமையாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் தொடர்ந்து பெய்யும் என்பதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    English Summary

    As the center of Cyclone Arnab began crossing the coast around 1:20 AM, it was initially expected that the entire central portion would complete its landfall by 4 AM. However, the meteorological department has estimated that the cyclone may take an additional three hours to fully cross the coast, as it has remained stationary in one spot during the landfall process.