Cyclone Arnab: வங்கக் கடலில் உருவாகும் ‘அர்னாப்’ புயல்.. வங்கதேசம் பரிந்துரைத்த பெயருக்கு அர்த்தம்?

  • சென்னை: வங்கக்கடலில் இன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வரும் அக்டோபர் 26 ஆம் தேதி புயலாக உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த அர்னாப் (கடல்) என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில் வங்கக் கடலில் இன்று அக்டோபர் 23 ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 25 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது வரும் அக்டோபர் 26 ஆம் தேதி காலை புயலாக வலுப்பெற்று பின்னர், மேற்கு வடமேற்காக நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த 'அர்னாப்' (Arnab) என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. வங்க மொழியில் அர்னாப் என்றால் கடல் என்று அர்த்தம்.

    Advertisement

    வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயர்களை இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்கூட்டியே பரிந்துரைக்கின்றன. உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய, பசிபிக் பொருளாதார சமூக ஆணையத்தின் கீழ் செயல்படும் குழு இதற்கான பெயர்ப் பட்டியலை தயாரித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா பரிந்துரைத்த பெயர்களில் 'கதி', 'தேஜ்', 'முரசு', 'ஆக்' ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில் தான், உருவாகவிருக்கும் புதிய புயலுக்கு 'அர்னாப்' (ARNAB) என பெயர் சூட்டப்படவுள்ளது. தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக உருவானால் வங்கதேசம் பரிந்துரைத்துள்ள அர்னாப் என்ற பெயர் சூட்டப்படும். மேலும், நடப்பாண்டில் வங்கக்கடலின் முதல் புயலாகவும் 'அர்னாப்' இருக்கும்.

    Advertisement

    வங்கக் கடலில் கடந்த செப்டம்பர் மாதம் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 'அர்னாப் புயல்' என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் அது புயலாக வலுப்பெறாமல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே இருந்ததால், இந்திய வானிலை ஆய்வு மையம் அதற்கு அதிகாரப்பூர்வமாக 'அர்னாப்' என்று பெயர் சூட்டவில்லை. இந்நிலையில் தற்போது உருவாகவுள்ள புயலுக்கு 'அர்னாப்' என பெயர் சூட்டப்படவுள்ளது.

    இந்த அர்னாப் புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அர்னாப் புயலுக்கு பின் வரும் அடுத்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த முரசு என்ற பெயர் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    IMD has stated that a low-pressure area, which formed over the Bay of Bengal today, is expected to intensify and potentially develop into a cyclonic storm by October 26. This cyclone will be named 'Arnab'—a name suggested by Bangladesh.