Arnab: கரையைக் கடந்தது அர்னாப் புயல்.. பலத்த காற்றால் சென்னை - ஆந்திரா இடையே 12 விமானங்கள் ரத்து!

  • சென்னை: ஒர்னாப் (Arnab) புயல் இன்று அதிகாலை ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடா ஏனாம் பகுதியில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 150 கி.மீ வரை பலத்த சூறாவளி காற்று வீசியது. ஒர்னாப் புயல் காரணமாக சென்னை - ஆந்திர பிரதேசம் இடையேயான 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    ஒர்னாப் (Arnab) புயலின் கண் பகுதி இன்று அதிகாலையே கரையை கடந்த நிலையில், பின்பகுதி கரையைக் கடந்து வருகிறது. இந்நிலையில் மணிக்கு 135 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காக்கிநாடா, கோனசீமா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் சூறைக்காற்று வீசிவரும் நிலையில் சென்னையிலிருந்து ஆந்திரா செல்கிற 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அர்னாப் மிகத் தீவிரப் புயல் நேற்று (அக்.27) இரவிலிருந்து வேகமாக நகர்ந்து, இன்று (அக்டோபர் 28) அதிகாலை 2 மணி முதல் 4 மணியளவில் கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 150 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசியது.

    நேற்று வங்கக்கடலின் மத்திய மேற்குப் பகுதியில், ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தை ஒட்டி நிலைகொண்டிருந்த அர்னாப் புயல், 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது.

    Advertisement

    ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்மேற்கே 170 கி.மீ. தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கே 170 கி.மீ. தொலைவிலும், பாபட்லாவிலிருந்து கிழக்கு-வடகிழக்கே 240 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்தது. மேலும், ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து தென்மேற்கே 410 கி.மீ தொலைவில் புயல் நிலைகொண்டிருந்தது.

    அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு-வடமேற்கு திசையிலும், அதன்பிறகு வடமேற்கு திசையிலும் புயல் நகர்ந்து, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே, ஏனாமுக்கு தெற்கே மிகத் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது.

    Advertisement

    புயல் கரையைக் கடந்தபோது பலத்த காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே, அர்னாப் புயல் தாக்கம் காரணமாக, சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் நேற்று இரவு கடல் சீற்றம் ஏற்பட்டு சாலையில் குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. மேலும் சென்னையின் சில கடலோரப் பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

    குறிப்பாக, வடசென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் அலைகள் சீறிப்பாய்ந்து, பாறைகளில் மோதி சாலையில் தெறித்து விழுந்தன. கடல் அலைகளின் தாக்கத்தால் சாலையில் கடல் நீர் தேங்கியுள்ளதால், அச்சத்துடன் பயணிப்பதாக அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    Advertisement

    இதேபோல் அர்னாப் புயல் எதிரொலியால் பட்டினப்பாக்கம் பகுதியிலும் கடல் சீற்றம் அதிகரித்தது. அங்கு வழக்கத்தைவிடப் பெரிய அலைகள் அடுத்தடுத்து எழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மீனவர்கள் தங்களது படகுகளை கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    English Summary

    Cyclone Arnab made landfall early this morning in the Kakinada-Yanam region of Andhra Pradesh. At the time of landfall, the cyclone brought intense, gale-force winds reaching speeds of up to 150 km/h. Due to Cyclone Arnab, 12 flight services between Chennai and Andhra Pradesh have been cancelled.