சென்னை: வங்கக்கடலில் முரசு புயல் உருவாகி இருக்கும் நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவிப்பு ஒன்றையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை (TNDRRA) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் "முரசு" புயலை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
தற்போது புயல் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகர்கிறது. இருப்பினும், அடுத்த சில நாட்களுக்கு வடக்கு தமிழ்நாட்டில் கனமழை, பலத்த சூறைக்காற்று மற்றும் மிகக் கொந்தளிப்பான கடல் நிலை நிலவும். பதற்றமடையத் தேவையில்லை; ஆனால் அனைவரும் விழிப்புடன் இருந்து, எளிய நடைமுறை முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு, கீழ்க்காணும் பொது வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். "முரசு" புயல் வங்காள விரிகுடாவில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 480 கி.மீ. தொலைவில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நவம்பர் 2 காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெற்று, நவம்பர் 2 இரவு முதல் நவம்பர் 3 அதிகாலைக்குள் ஆந்திராவில் நெல்லூர் நரசாபுரம் இடையே கரையைக் கடக்கும். கரையைக் கடப்பது ஆந்திராவில் என்றாலும், தமிழ்நாட்டின் கடலோர மற்றும் வடக்கு மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றும் கனமழையும் இருக்கும். நவம்பர் 2, 2026: வடக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமுதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும். நவம்பர் 3, 2026: பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமுதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும். கொந்தளிப்பான கடல் மற்றும் உயர் அலைகள்: நவம்பர் 1 பிற்பகல் முதல் நவம்பர் 4 காலை வரை வடக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் மிகக் கொந்தளிப்பாக இருக்கும்; 4 முதல் 6 மீட்டர் உயர அலைகளும் குறைந்த பார்வைத்திறனும் இருக்கும். நவம்பர் 4-க்குப் பிறகு நிலைமை படிப்படியாகச் சீராகும். வடக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நவம்பர் 4, 2026 காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் கண்டிப்புடன் அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து மீன்பிடிப் பணிகளும் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாகத் திரும்ப வேண்டும்: தற்போது ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் அருகிலுள்ள துறைமுகம் அல்லது கரைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும். படகுகளைக் கண்காணித்து, பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்ப வழிகாட்டும் பணியில் மீன்வளத் துறையும் துறைமுக அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். உயர் அலைகளும் கடல் கொந்தளிப்பும் கடலோரச் சாலைகளில் (ECR, OMR போன்றவை) நீர் தெறிக்கச் செய்யலாம். கடற்கரை நடைபாதைகளிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருங்கள். நீர் தேங்கிய இடங்களைத் தவிருங்கள்: நீரின் ஆழம் தெரியாத நீர் தேங்கிய சாலைகள் மற்றும் தாழ்வான சுரங்கப்பாதைகளில் நடக்கவோ வாகனம் ஓட்டவோ வேண்டாம். அத்தியாவசியப் பொருட்களைத் தயாராக வைத்திருங்கள்: போதுமான குடிநீர், தேவையான மருந்துகள், அவசர விளக்குகள்/டார்ச் லைட்கள், பவர் பேங்குடன் சார்ஜ் செய்த கைப்பேசிகள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருங்கள். மழைநீர் தடையின்றி வெளியேற மாடி மற்றும் பால்கனி வடிகால் வாய்களைச் சுத்தம் செய்யுங்கள். பலத்த காற்றில் பறந்து செல்லக்கூடிய, பொருத்தப்படாத தகரத் தகடுகள், விளம்பரப் பலகைகள் அல்லது எடை குறைந்த வெளிப்புறப் பொருட்களைப் பாதுகாப்பாகக் கட்டி வையுங்கள். அதிகாரப்பூர்வ வானிலைச் செய்திகளைப் பின்பற்றுங்கள், TNDRRA, IMD மற்றும் உங்கள் மாவட்ட ஆட்சியரின் உறுதிசெய்யப்பட்ட தகவல்களை மட்டுமே நம்புங்கள். மாநில அவசர உதவி எண்: 1070, மாவட்ட அவசர உதவி எண்: 1077 ஆகியவற்றை அழைக்கலாம். கடற்கரைகள் அல்லது கடலோரச் சாலைகளுக்குச் செல்ல வேண்டாம்: கடல் கொந்தளிப்பாக இருக்கும் நேரத்தில் பொழுதுபோக்கு, புகைப்படம் எடுத்தல் அல்லது சுற்றிப்பார்ப்பதற்காகக் கடற்கரை, துறைமுக நடைமேடை அல்லது கடலோரச் சாலைகளுக்குச் செல்ல வேண்டாம். கடலுக்குள் செல்ல வேண்டாம்: மீனவர்கள் நவம்பர் 4 காலை வரை கடலுக்குள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மின் கம்பங்கள் அல்லது மின் கம்பிகளைத் தொட வேண்டாம்: ஈரமான மற்றும் காற்று வீசும் வானிலையில் தெருவிளக்குகள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் அறுந்து விழுந்த மின் கம்பிகளிலிருந்து விலகி இருங்கள். பலவீனமான அல்லது பாதுகாப்பற்ற கட்டடங்களில் தங்க வேண்டாம்: பாதுகாப்பற்ற கூரைகள், பலவீனமான குடிசை வீடுகள் அல்லது இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டடங்களில் தங்குவதைத் தவிருங்கள். அறிவுறுத்தப்பட்டால், உள்ளூர் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுங்கள். சரிபார்க்கப்படாத வதந்திகளைப் பகிர வேண்டாம்: அதிகாரப்பூர்வமற்ற பீதியூட்டும் செய்திகளையோ சரிபார்க்கப்படாத வானிலை வதந்திகளையோ சமூக ஊடகங்களில் பகிரவோ பகிர்ந்து அனுப்பவோ வேண்டாம்." என கூறப்பட்டுள்ளது.பொது வழிகாட்டுதல்
"முரசு" புயல்
மிகக் கனமழை
கடல் கொந்தளிப்பு
மீனவர்கள்
கடலோரச் சாலைகள்
அத்தியாவசியப் பொருட்கள்
அவசர உதவி எண்
செய்யக் கூடாதவை
வானிலை
வதந்தி பரப்ப வேண்டாம்