சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் உருவான முரசு புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என்றும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலைக்குள் கரையை கடக்கும் எனவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். தற்போது சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கு பகுதியில் 230 கிமீ தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த புயல் தாக்கத்தால் சென்னை மற்றும் திருவள்ளூரில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூரில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த 31 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Depression), பின்னர் இது மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (01.11.2026) காலை 05.30 மணிஅளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression) அதே பகுதியிலும் நிலவியது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் நேற்று காலை 11.30 மணிஅளவில் முரசு புயலாக மாறியது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டிருந்தது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே இன்று நள்ளிரவு அல்லது நாளை காலையில் கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில் முரசு புயல் இன்று மாலையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், தற்போது சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கு பகுதியில் 230 கிமீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- தென் மேற்கு வங்கக் கடலில் உருவான முரசு புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. தற்போது சென்னையில் இருந்து கிழக்கு - வடகிழக்கு பகுதியில் 230 கிமீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. தொடர்ந்து மேலும் நகர்ந்து கிழக்கு - வடகிழக்கே நகர்ந்து, ஆந்திரா நெல்லூர் இடையே தெற்கு பகுதியில் ஓங்கா அருகே இன்று மாலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி பசுபிக் உயரழுத்தம், மேற்கத்திய தாழ்வு நிலை காரணமாக இந்த முரசு புயலானது வலு இழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முரசு புயல் தாக்கத்தால் தெற்கு ஆந்திரா மற்றும் சென்னை, திருவள்ளூரில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது காற்றை பொறுத்தவரை 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.. என்று அவர் கூறியுள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையமும் இன்று சென்னை, திருவள்ளூரில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விட்டிருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.முரசு புயல் உருவானது
தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது
சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை