இன்று கரையை கடக்கும் முரசு புயல்.. சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.. 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!

  • சென்னை: வங்க கடலில் உருவான முரசு புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது எனவும், இன்று இரவு நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே ஓங்கோல் அருகே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. முரசு புயல் காரணமாக தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூரில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று முன் தினம் காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression), நேற்று காலை 11.30 மணிஅளவில் முரசு புயலாகவும் வலுப்பெற்றது.

    Advertisement

    முரசு புயல் இன்று கரையை கடக்கிறது

    இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் தீவிர புயலாக மாறியுள்ளது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே ஓங்கோல் அருகே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முரசு புயல் தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று தெலங்கானாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    Advertisement

    சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    முரசு புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை, திருவள்ளூரில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இன்று இந்த இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள முரசு புயல், ஆந்திராவின் ஓங்கோல் அருகே கரையைக் கடக்க உள்ள நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இன்று மழை பெய்யும் இடங்கள்

    இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று திங்கட்கிழமை சென்னை மற்றும் திருவள்ளூர், மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில்
    ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு

    நாளை 3 ஆம் தேதி, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    04-11-2026 மற்றும் 05-11-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்
    காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06-11-2026 மற்றும் 07-11-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தமிழக கடலோரப்பகுதிகள்: 02-11-2026 முதல் 04-11-2026: வட தமிழக கடலோரப்பகுதிகளில் 1 ஆம் தேதி நண்பகல் முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் 1 ஆம் தேதி இரவு முதல் 3 ஆம் தேதி காலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் பின்னர் காற்றின் வேகம் படிபடியாக குறைந்து 4 ஆம் தேதி காலை வரை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 05-11-2026: எச்சரிக்கை ஏதுமில்லை.. என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Cyclone 'Murasu', which formed in the Bay of Bengal, has now intensified into a severe cyclonic storm. It is projected to make landfall tonight near Ongole, between Nellore and Narasapur. Due to this cyclone, an 'orange' alert for extremely heavy rainfall has been issued for Chennai and Thiruvallur districts in Tamil Nadu, while heavy rainfall is expected in five other districts, including Chengalpattu and Kanchipuram.