தூத்துக்குடி: தூத்துக்குடி வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகம் உள்ளிட்ட தமிழகத்தில் ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடல் பகுதியில் சுமார் 60 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கடலில் மீன் பிடிக்க மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு பகுதி நேற்று காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மத்தியகிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து, மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது இன்றைக்குள் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர- தெற்கு ஓடிசா கடலோர பகுதிகளை 23 ஆம் தேதி காலையில் சென்றடையக்கூடும். இது புயலாக மாறும் நிலையில் இதற்கு அர்ணாப் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் காற்றானது சுமார் 60 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க மீன்வளத்துறை அறிவித்துள்ளது. கடல் பகுதியில் நிலவிவரும் பலத்த காற்று காரணமாக தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற தோணிகள் சரக்குகளை இறக்காமல் மீண்டும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு திரும்பி உள்ளது.