சென்னை: சென்னையில் நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் கணித்துள்ளார். மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கணித்து வருகிறார்கள். அது போல் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை, "தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும்.
தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், வடமாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பாகவும் வடகிழக்கு பருவமழை இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை" என தெரிவித்துள்ளார். அந்த வகையில் டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் கூறியிருப்பதாவது: வடமாநிலங்களில் இன்று வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால் தென் மேற்கு பருவமழை இன்றுடன் நிறைவு பெற்றது. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது. தற்போது தமிழகத்திற்குள் குளிர்ந்த காற்று ஊடுருவும் சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக வரும் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் எல் நினோ உருவானது. இதனால் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யவில்லை. அதன் பிறகு எல் நினோ, சூப்பர் எல் நினோவாக மாறியது. தற்போது தீவிர எல் நினோவாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக தென் மேற்கு பருவமழைக்கு நேர்மாறாக வடகிழக்கு பருவமழை மிக அதிக அளவில் பெய்யும். வடகிழக்கு பருவமழை காலத்தின் போது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை வழக்கமாக தமிழகத்தில் 44 சென்டிமீட்டர் மழை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 60 செ.மீ.க்கு மேல் மழை இருக்க வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இயல்பை விட மழை அதிக அளவில் பெய்யும். அதாவது இயல்வை தாண்டி ஒரே நாளில் 20 செ.மீட்டர் முதல் 24 செ.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிலும் நவம்பர் மாதத்தில் சென்னையிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரே நாளில் 40 செ.மீ. முதல் 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அவர் காலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடற்கரையில் காற்று சுழற்சி நிலவுகிறது. அதனுடன் இணைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழக கடற்கரை வரை நீடிக்கிறது. இதனால் தமிழக கடற்கரை ஒட்டிய பகுதிகளில் மழை மேகங்கள் உருவாகி வருகிறது. பிற்பகல்/மாலை நேரத்தில் உள் மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக இடி,மின்னலுடன் நின்று பெய்யக்கூடிய கனமழைக்கு இன்றைய தினம் சாதகமான நிலை உருவாகி வருகிறது. கடலோர மாவட்டங்களில் தற்போது வெயில் காணப்பட்டாலும் பிற்பகலில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது, உள் மாவட்டங்களில் மாலையில் மழை வாய்ப்பு உள்ளது. அறுவடை செய்யும் விவசாயிகளும், களைக்கட்டுபாடு / உரமிடுதல் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் வேளாண் பணிகளை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.சென்னையில் மழை பொழிவு
சூப்பர் எல் நினோ
கடலோர மாவட்டங்கள்
நவம்பரில் சம்பவம் செய்யும் மழை?
இடியுடன் கூடிய மழை
விவசாயிகள் கவனத்திற்கு!