தீபாவளி எதிரொலி.. டெல்லியில் மோசமான காற்று தரம்.. திணறும் மக்கள்! சென்னையைக் காப்பாற்றிய கனமழை

  • சென்னை: நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், பட்டாசு வெடிப்பு மற்றும் வானிலை மாற்றங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு (AQI - Air Quality Index) குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. டெல்லியின் காற்றின் தரம் மிக மோசமாக மாறி உள்ளது.

    Advertisement

    இந்தியாவின் பெருநகரங்களில் காற்றுத் தரம் எவ்வாறு மாறியுள்ளது, தமிழகத்தின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.

    Advertisement

    காற்றுத் தரம் (AQI) என்றால் என்ன?

    சுற்றுச்சூழலில் நாம் சுவாசிக்கும் காற்றின் தூய்மையை 0 முதல் 500 வரை உள்ள அளவீட்டின்படி காற்றுத் தரக் குறியீடு (AQI) காட்டுகிறது.

    0 முதல் 50 வரை இருந்தால் காற்று 'மிகவும் நல்லது'.
    51 முதல் 100 வரை இருந்தால் 'மிதமானது / திருப்திகரமானது'.
    101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமான மாசுபாடு'.
    201 முதல் 300 வரை இருந்தால் 'மோசம்'.
    301 முதல் 400 வரை இருந்தால் 'மிக மோசம்'
    400-க்கு மேல் சென்றால் 'ஆபத்தானது' (Severe).

    டெல்லியில் கடுமையான பாதிப்பு

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் வட இந்தியாவில் காற்றுத் தரம் மிகவும் மோசமடைவது வழக்கம். டெல்லியில் பனிக்காலக் குளிர்காற்று மற்றும் விவசாயக் கழிவுகள் எரிப்புடன் தீபாவளி பட்டாசுப் புகையும் சேர்ந்துகொண்டதால், காற்றின் தரம் 380 முதல் 420 வரை உயர்ந்து 'மிக மோசம்' மற்றும் 'ஆபத்தான' நிலையை எட்டியுள்ளது. பல இடங்களில் வானம் முழுவதும் நச்சுப் புகைப் படலமாக மாறியுள்ளதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற உபாதைகள் அதிகரித்துள்ளன.

    Advertisement

    மும்பை, பெங்களூர் , ஹைதராபாத் நிலவரம்

    மும்பையில் காற்றுத் தரம் 120 முதல் 160 வரை பதிவாகி மிதமான மாசுபாட்டுடன் காணப்படுகிறது. ஹைதராபாத்தில் தீபாவளி பட்டாசு காரணமாக காற்றுத் தரம் 70 முதல் 110 வரையிலும், பெங்களூரில் பசுமைச் சூழல் மற்றும் காற்று வீசுதல் அதிகமானால் உள்ள காரணத்தால் 60 முதல் 90 என்ற அளவில் மிதமான திருப்திகர நிலையிலும் நீடிக்கிறது.

    சென்னையைக் காப்பாற்றிய தீபாவளி கனமழை!

    சென்னையில் பொதுவாக தீபாவளி இரவில் பட்டாசுப் புகையால் காற்றுத் தரம் 200-ஐத் தாண்டி மோசம் அடைவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் நள்ளிரவு தொடங்கி காலை வரை பெய்த விடிய விடிய கனமழை சென்னைக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

    Advertisement

    வளிமண்டலத்தில் பரவ வேண்டிய பட்டாசுப் புகையையும் நச்சுத் துகள்களையும் மழைநீர் அடித்துச் சென்றதால், சென்னை நுங்கம்பாக்கம், ஆலந்தூர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காற்றுத் தரம் 70 முதல் 90 என்ற திருப்திகரமான அளவிலேயே பதிவாகியுள்ளது. மழை காரணமாக காற்று சுத்தமாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    மதுரை, திருச்சி நகரங்களின் நிலை

    தென் தமிழக நகரங்களான மதுரை மற்றும் திருச்சியிலும் தீபாவளி தினக் கொண்டாட்டங்களால் பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்பட்டன.

    மதுரை: பெரிய அளவில் மழை இல்லாததால், மாலையில் பட்டாசுப் புகை சூழ்ந்து காற்றின் தரம் 100 முதல் 130 வரை மிதமான மாசுபாட்டு நிலையை எட்டியது.

    Advertisement

    திருச்சி: மத்திய மாவட்டமான திருச்சியில் மேகமூட்டமான வானிலையுடன் ஆங்காங்கே லேசான தூறல் இருந்ததால், காற்றுத் தரம் 80 முதல் 115 வரை மிதமான அளவில் பதிவானது. கோவையில் 90 என்ற அளவில் உள்ளது.

    பொதுமக்களுக்கான முக்கியப் பாதுகாப்பு ஆலோசனைகள்

    காற்றுத் தரம் மோசமாக இருக்கும் நகரங்களில் வசிப்பவர்கள் தேவையின்றி அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் திறந்தவெளியில் நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இதய நோய் உள்ளவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம். பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடித்து, குறைந்த புகையை வெளிப்படுத்தும் பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்துவதே சுற்றுச்சூழலுக்கும் உடல் நலனுக்கும் நல்லது.

    English Summary

    Diwali Air Quality Alert: Delhi Chokes in ‘Severe’ AQI While Rain Rescues Chennai