சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று அதிகமாக இருக்கக்கூடும் என்றும், குறிப்பாக கரூர், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது தொடர்ந்து, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஜூலை 20 முதல் 22 வரை இடி மின்னல், பலத்த காற்று லேசான மழை பெய்யக்கூடும். அதேசமயம், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று அதிகமாக இருக்கக்கூடும். குறிப்பாக கரூர், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். நேற்றைய தினம் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மீனம்பாக்கம்-103.82, திருத்தணி-103.28, கடலூர், மதுரை நகரம் தலா 102.92, வேலூர்-102.74, திருச்சி 102.38, நுங்கம்பாக்கம் 101.84, புதுச்சேரி 101.12, ஈரோடு, நாகப்பட்டினம் 100.76, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர் தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.