சென்னை: தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும் எனவும், நாளை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. அதே நேரம் இன்று தலைநகர் சென்னையில் வெயில் வாட்டி வதைக்கும் என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. இடையிடையே மழை பெய்தாலும் திடீரென கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றன. கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்தே மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் பெரிதாக தெரியவில்லை.
ஆனால் நேற்று மற்றும் இன்று பல்வேறு இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. தலைநகர் சென்னையிலும் மக்கள் வெளியே வரமுடியாதபடி கொளுத்தி எடுத்தது. இந்த நிலையில் இன்றும் சென்னையில் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். நாளை தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் கனமழை வெளுத்து வாங்கும். சென்னையில் இன்று 180 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.