சென்னை: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இன்றும், நாளையும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். வெப்பநிலையை பொறுத்தவரை உள் தமிழகத்தில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் மாதத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. திரும்பவும் மே மாதம் வந்துவிட்டதோ என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு வெயில் விட்டு விளாசுகிறது. வெளியில் சென்றாலே கண்கள் கூசும் அளவிற்கு சுட்டெரிக்கிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வதைக்கிறது.
தஞ்சை, திருவாரூர் என பல்வேறு மாவட்டங்களில் வெயில் விட்டு விளாசுகிறது. எனினும் ஒரு சில மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்வித்து விடுகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை உள் தமிழகத்தில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என கூறப்பட்டுள்ளது.